கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்


.


கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி அதிகாலை 4 மணி கோவில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 4.30 மணிக்கு திருவனந்தல் பூஜை நடந்தது. காலை 6 மணிக்கு பூவனநாத சுவாமி சன்னதி முன்பு கும்ப பூஜை, சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து கொடி பட்டம் எடுத்து ரத விதிகளை சுற்றி கோவிலை வந்து அடைந்தது.
காலை 7 மணிக்கு மேல் சுவாமி சன்னதியில் முன் உள்ள கொடிமரத்தில் பங்குனி பெருந் திருவிழா கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடி மரம், நந்தியம் பெருமான், பலிபீடம் ஆகியவற்றுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது.
விழாவில் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு,,கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, முன்னாள் எம் பி காஞ்சி பன்னீர்செல்வம்,தமாகா வடக்கு மாவட்ட தலைவர் ராஜகோபால், நகர்மன்ற ஆணையர் கமலா, அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு,அறங்காவலர் குழு உறுப்பினர்கள் திருப்பதிராஜா, ரவீந்திரன், சண்முகராஜ்,கோவில் ஆய்வாளர் சிவகலைப்ரியா மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகளை கோவில் பட்டர்கள் சுரேந்தர், அரவிந்த் , ரகு , ராமு ஆகியோர் செய்தனர்.
,இன்று இரவு 8 மணிக்கு சுவாமி, அம்மன் பூங்கோவில் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து விழா நாட்களில் மண்டகப்படிதாரர்கள் சார்பில் காலை, மாலை சுவாமி, அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
13-ம் தேதி தேரோட்டம், 14-ம் தேதி தீர்த்தவாரி, 15-ம் தேதி இரவு தெப்பத் உற்சவமும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி மற்றும் மண்டகப் படிகாரர்கள், திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


