கோவில்பட்டியில் போதை பொருள் விற்பனையை தடுத்து நிறுத்தக்கோரி டி.எஸ்.பி.யிடம் மனு கொடுக்கும் போராட்டம்

கோவில்பட்டி காவல் உட்கோட்ட பகுதியில் போதை பொருள் விற்பனையை தடுத்து நிறுத்தக்கோரி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
கோவில்பட்டியில் சட்டவிரோத மது விற்பனை போதை பொருட்கள் விற்பனையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு, மாமன்னர் பூலித் தேவர் மக்கள் நல இயக்கம், நடராஜபுரம் தெரு பொதுமக்கள் நல வாழ்வு இயக்கம் சார்பில் காவல் துணை கண்காணிப்பாளர் வ.ஜெகநாதனிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
டி.எஸ்.பி.அலுவலகம் முன்பு கூடிய அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்து கோஷம் எழுப்பினார்கள். இந்த போராட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் நல இயக்கம் தலைவர் செல்வத்துரை (என்ற) செல்வம், நடராஜபுரம் தெரு பொது மக்கள் நலவாழ்வு இயக்கம் தலைவர் செண்பகம், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், பாண்டியனார் மக்கள் இயக்கம் வழக்கறிஞர் சீனி ராஜ் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
அதை த தொடர்ந்து டி.எஸ்.பி.யை சந்தித்து அளித்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-,
கோவில்பட்டி காவல் உட்கோட்டத்தில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
காவலர்கள் ரோந்துப் பணியை அதிகரிக்க வேண்டும்.
காவல் நிலையங்களுக்கு வரும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உளவுத்துறை செயல்பாட்டை அதிகரிக்க வேண்டும்.
காவல்துறையில் சில அதிகாரிகள் ஆதரவுடன் நடைபெறும் சட்ட விரோத மது விற்பனை, போதைப் பொருட்கள் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும்.
சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது உரிய முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தனர்.
இதை தொடர்ந்து, கோட்டாட்சியர் அலுவலகம் சென்று அவரது உதவியாளரை சந்தித்து இதே மனுவை கொடுத்தனர்.
