சேவைக்குறைபாடு: புகார்தாரருக்கு ரிசார்ட் நிறுவனம் நஷ்ட ஈடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு-
சேவைக் குறைபாடு காரணமாக ரிசார்ட் நிறுவனம் 4 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது
தூத்துக்குடி தனசேகரன் நகரைச்; சார்ந்த கபிலன் ரத்தின சபாபதி என்பவர் சென்னையிலுள்ள ஒரு நிறுவனத்திடம்; 3.2 லட்சம் செலுத்தி கொடைக்கானலில் ஒரு ரிசார்ட்டில் தங்குவதற்காக உறுப்பினராக சேர்ந்துள்ளார்.
அங்கு 2 ஆண்டுகளுக்கு பராமரிப்பு கட்டணம் இல்லாமல் தங்கலாம் என அந்த நிறுவனம் கூறியிருந்தது. ஆனால் புகார்தாரர் அங்கு தங்காமலேயே முதலாண்டுக்கான பராமரிப்பு கட்டணத்தை செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது.
உடனே மனுதாரர் அந்த நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு இதை நாங்கள் சரி செய்து விடுகிறோம். நீங்கள் பணம் செலுத்த வேண்டியதில்லை என வாய் மொழியாக கூறியுள்ளனர். ஆனால் சரி செய்து கொடுக்கவில்லை. இதனால் தான் செலுத்திய உறுப்பினர் கட்டணத்தை திரும்பத் தருமாறு கேட்டுள்ளார். இதற்கு அந்த ரிசார்ட் நிறுவனம் பணத்தை திருப்பித் தர முடியாது எனக் கூறி விட்டது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான புகார்தாரர் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் ஏற்கனவே செலுத்திய தொகையான 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மற்றும்; சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ. 1,50,000;, வழக்கு செலவுத் தொகை ரூபாய் 10,000 ஆக மொத்தம் 4 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை 2 மாதத்திற்குள்; வழங்க வேண்டும் இல்லையென்றால் அத்தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9 % வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.