தூத்துக்குடியில் குடியரசு தினவிழா கொண்டாட்டம் ; ஆட்சியர் இளம்பகவத், தேசியகொடி ஏற்றினார்
இந்தியாவின் 76வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டது, சென்னையில் நடந்த விழாவில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் ஆர்,.என்.ரவி தேசிய கொடியேற்றினார்.
தூத்துக்குடியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தருவை மைதானம் விளையாட்டு அரங்கத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் கக. இளம்பகவத் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் முன்னிலையில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் இளம்பகவத் ஏற்றுக்கொண்டார். பின்னர் அமைதியையும், சமாதானத்தையும் வலியுறுத்தும் விதமாக புறாக்கள் பறக்கவிடப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், காவல் துறை மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த 681 அரசு அலுவலர்களுக்கு சிறப்பாக பணிபுரிந்தமைக்கு நற்சான்றிதழ்கள் வழங்கினார்.
காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை உயர் அதிகாரிகள் 54 பேருக்கு பதக்கங்களும், 73 காவலர்களுக்கு சான்றிதழையும் வழங்கினார். மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் 67 பயனாளிகளுக்கு 4 கோடியே 62 லட்சத்து 66 ஆயிரத்து 556 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு ஆட்சியர் இளம்பகவத் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் 2500 பேர் கலந்து கொண்ட கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த நிகழ்ச்சிகளை ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கண்டு ரசித்தனர்.
விழாவில் கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், சமூக நல அலுவலர் பிரேமலதா, மாற்றுத் திறனாளிகள் அலுவலர் பிரம்ம நாயகம், கோட்டாட்சியர்கள் பிரபு, கலைமாமணி, மகாலட்சுமி, ஆதிதிராவிடர் நல அலுவலர் செபஸ்தியான், மாவட்ட வளங்கள் அலுவலர் மல்லிகா, வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், தாசில்தார் முரளிதரன், காவல்துறை நகர உதவி கண்காணிப்பாளர் மதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.