மொழிப்போர் தியாகிகள் நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம்; மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை மூலக்கொத்தளத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர்நீத்த நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோரின் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இதனைத்தொடர்ந்து மொழிப்போராட்ட தியாகிகள் நடராசன், தாளமுத்து ஆகியோரின் நினைவு தினத்தை ஒட்டி அவர்களது திருவுருவ படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னதாக நினைவிடத்தை திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், “மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்! வீர வணக்கம்!” என முழக்கமிட்டார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் வே. ராஜாராமன் செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு. இரா. வைத்திநாதன்,, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
ஆதிக்க இந்திக்குத் தமிழ்நாடு அடிபணியாது என்பதை உணர்த்திய மொழிப்போர்க்களத்தின் முதல் தியாகச் சுடர்கள் நடராசன் – தாளமுத்து ஆகியோரின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தை மூலக்கொத்தளத்தில் திறந்து வைத்தேன்.
அதுமட்டுமல்ல, சகோதரர் திருமாவளவனின் கோரிக்கையினை ஏற்று, எழும்பூரில் உள்ள தாளமுத்து – நடராசன் மாளிகையில் அவர்தம் திருவுருவச் சிலைகளையும் நிறுவிடுவோம்.
தமிழைக் காக்கத் தம்மையே பலியிட்ட தீரர்களின் தியாகத்தால் இயக்கப்படும் அரசு இது! மொழிப்போர்த் தியாகிகளுக்கு எம் வீரவணக்கம்! தமிழ்வெல்லும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.