கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க மூப்பன்பட்டி கிராம மக்கள் எதிர்ப்பு
![கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க மூப்பன்பட்டி கிராம மக்கள் எதிர்ப்பு](https://tn96news.com/wp-content/uploads/2025/01/aac7b21a-5b02-49ef-9443-5de8049e89a3-850x560.jpeg)
கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டி கிராம மக்கள் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் மாரீஸ்வரன், கார்த்திக் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். ஊர் தலைவர் காளிமுத்து,காங்கிரஸ் கட்சி நிர்வாகி ரமேஷ் மூர்த்தி மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்
அவர்கள் கோவில்பட்டி நகராட்சியுடன் மூப்பன்பட்டி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
பின்னர் அவர்கள் கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் அளித்த மனுவில் கூறி இருந்ததாவது:-
கோவில்பட்டி வட்டம் மூப்பன்பட்டி ஊராட்சியில் சுமார் 2500 பேர் வசித்து வருகின்றனர். நாங்கள் எங்களது வாழ்வாதாரத்துக்கு விவசாயத்தையே நம்பி உள்ளோம். எங்கள் கிராமத்தில் செவல்குளம், கரிசல்குளம் என 2 பெரிய கண்மாய்கள் உள்ளன. இதன் மூலம் விவசாயம் செய்து வருகிறோம்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கிராமமக்கள் வேலை பெற்று வருகின்றனர். இந்த ஊராட்சியை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைப்பதால் 100 நாள் வேலை திட்டம் ரத்து செய்யப்படும். விவசாயத்துக்கான இலவச மின்சாரம் நிறுத்தப்படும். விவசாய இடுபொருள் மானியம் போன்றவை கிடைக்கப்பெறாமல் போய்விடும்.
அதே போல், சொத்து வரி, தொழில்வரி போன்றவை உயர்த்தப்பட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே, மூப்பன்பட்டி ஊராட்சியை எங்களது விருப்பத்துக்கு மாறாக கோவில்பட்டி நகராட்சியுடன் இணைப்பதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)