ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி

 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்தார். இதையடுத்து, இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு 17ம் தேதி கடைசி நாளாகும்.அதேவேளை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா? அல்லது திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடுமா? என்பது குறித்து குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  வி.சி.சந்திரகுமார் தற்போது திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பதவியில் உள்ளார் .

நெசவாளர் குடும்பப் பின்னணியை சேர்ந்த வி.சி.சந்திரகுமார், முதுநிலை பொது நிர்வாகம் படித்துள்ளார். ஜவுளி மொத்த வியாபாரம் செய்துவரும் சந்திரகுமார், 1987-இல் அ.தி.மு.க-வில் வார்டு பிரதிநிதியாகத் தனது அரசியல் வாழ்வைத் தொடங்கினார்.

பின்னர் விஜயகாந்த் ரசிகர் மன்ற மாவட்டத் தலைவரானார். தே.மு.தி.க ஆரம்பிக்கப்பட்ட போது அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தார்.

2011 தேர்தலில் அ.தி.மு.க-தே.மு.தி.க கூட்டணி அமைத்துப் போட்டியிட்டபோது, ஈரோடு கிழக்குத் தொகுதியில் தே.மு.தி.க சார்பில் நின்று சந்திரகுமார் வெற்றி பெற்றார். கருத்து வேறுபாடு காரணமாக தே.மு.தி.க-வில் இருந்து விலகி தி.மு.கவில் இணைந்த சந்திரகுமாருக்குக் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டதுடன், 2016 தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுவிடம், வி.சி.சந்திரகுமார் தோல்வி அடைந்தார்.

2021 தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் வசம் சென்றதால் வி.சி.சந்திரகுமார் போட்டியிட முடியாமல் போனது.தற்போது இந்த தொகுதி திமுக வேட்பாளராக சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *