கோவில்பட்டி நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: பாண்டவர்மங்கலம் ஊராட்சி மக்கள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி நகராட்சியுடன் பாண்டவர்மங்கலம், மந்தித்தோப்பு உள்ளிட்ட 7 ஊராட்சிகளை இணைத்து தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசாணை வெளியிட்டது. இது தொடர்பாக கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கோவில்பட்டி நகராட்சியுடன் பாண்டவர்மங்கலம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பாண்டவர்மங்கலம் ஊராட்சி முன்னாள் தலைவர் கவிதா அன்புராஜ் தலைமை தாங்கினார்.
பாண்டவர் மங்கக்ல்ம் ஊராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் கலந்து கொண்டு கோவில்பட்டி நகராட்சியுடன் பாண்டவர்மங்கலம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். தொடர்ந்து அவர்கள் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறி இருந்ததாவது:-
பாண்டவர்மங்கலம் ஊராட்சி மன்றத்தை கோவில்பட்டி நகராட்சியுடன் இணைப்பதற்கு நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு இணைக்கப்பட்டால் கிராமப்புற மக்கள் ஆண்டுக்கு இருமுறை வரி செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவர். வரி சுமையும் அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
மேலும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், தொகுப்பு வீடுகள் பெறுதல் திட்டம், ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டம் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு கிடைக்கக்கூடிய அனைத்து வகை திட்டங்களும் கிடைக்காமல் கிராம மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
எனவே எங்களது ஊராட்சியை கோவில்பட்டி நகராட்சி உடன் இணைப்பதற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறோம். எங்களது பகுதியை எப்போதும் போல் ஊராட்சியாக செயல்பட ஆவண செய்ய வேண்டும். இல்லையென்றால் .20-ம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.