ஸ்ரீவைகுண்டம் கோவில் தேரில் உள்ள மரச்சிற்பங்களை கண்காட்சியாக வைக்க கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் அமைந்துள்ள கைலாசநாதர் கோவில், சனி தலமாக விளங்குகிறது.
சுமார் 60 வருடங்களுக்கு முன்பு வரை இக்கோவிலில் தேரோட்டம் நடந்துள்ளது. காலப்போக்கில் தேரோட்டம் நின்றுபோய்விட்டது. இதனால் இங்குள்ள தேர் அப்படியே ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு விட்டது.
.இந்த தேரில் 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் காலத்து சிற்பங்களான பெருமாள், தட்சிணாமூர்த்தி, பிரதோஷ மூர்த்தி, கஜலெட்சுமி, யாழி, பசு பால் கொடுக்கும் சிவலிங்கம், அரசனின் உருவங்கள், யானை பயிற்சி உருவங்கள், பூதகணங்கள், கோவில் கட்ட பல்லக்கில் பொருள்களை கொண்டு செல்லும் சிவனடியார்கள் என சுமார் 1500 க்கும் மேற்பட்ட மரச்சிற்பங்கள் மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.
.வரலாற்று சிறப்பை கூறும் விதமாக போர் குறித்தும், கண்ணப்பரின் கதை, நடனக்கலைகள் குறித்தும், வீணை மீட்டுவது நின்ற நிலையிலும் அமர்ந்த நிலையிலும், போர்க்கருவிகளை பயன்படுத்தும் முறைகள், பெண் தன்னை கண்ணாடியில் பார்க்கும் அழகிய சிற்பம், குறவன் தோளில் இளவரசி அமர்ந்திருக்கும் சிற்பம், பல்வேறு ஆன்மீக தகவல்களை குறித்து கூறப்படும் இந்த மரச்சிற்பத்தில் மிகவும் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த தேர் பராமரிப்பின்றி காணப்படுவதால் இந்த மரச்சிற்பங்கள் அனைத்தும் தற்போது அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த பகுதி மக்கள் கோவிலுக்கு புதிய தேர் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதன் அடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்த்த ராஜ் சட்டப்பேரவையில் புதிய தேர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு புதியதேர் அமைக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து புதிய தேர் செய்யும் பணிகள் நடந்து வருவதாக அறநிலையத்துறை மூலமாக கூறப்படுகிறது.
புதிய தேர் செய்து தேர் ஓட நடவடிக்கை எடுத்தாலும் கூட ஏற்கனவே ஓடிய பழைய தேர் பராமரிப்பின்றி வெயிலிலும், மழையிலும் சேதமடைந்து கிடைக்கிறது. சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த தேரில் உள்ள நாயக்கர் காலத்து மரச்சிற்பங்களை பாதுகாத்து கோவிலில் இந்த மரச்சிற்பங்களை பக்தர்களின் பார்வைக்கு கண்காட்சியாக வைத்து பழமையான இந்த சிற்பங்களை பாதுகாக்க வேண்டும் என்று பக்தர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
.