கோவில்பட்டி அருகே கூலிப்படையினர் உள்பட 3 பேர் சிக்கினர்
கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டியில் சந்தேகப்படும்படியான நபர்கள் ஒரு வீட்டில் தங்கியிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதனுக்கு தகவல் தெரிவித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
அதன்படி டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையில், தனிப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர்கள் செந்தில்குமார், மணிமாறன் மற்றும் போலீசார் செல்லத்துரை, சுரேஷ், அருண், செந்தில் ஆகியோர் லிங்கம்பட்டிக்கு மாறுவேடத்தில் சென்று சம்பந்தப்பட்ட வீட்டை கண்காணித்தனர்.
சிறிது நேரத்தில் அந்த வீட்டை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர். போலீசார் வருவதை அறிந்து வீட்டில் இருந்த நபர்கள் வீட்டை உள்பக்கமாக பூட்டி கொண்டனர்.இதையடுத்து கதவை திறக்கும் படி போலீசார் தட்டினர். ஆனால் அவர்கள் திறக்கவில்லை. இந்த நிலையில் திடீரென அவர்கள் கதவை திறந்து கொண்டு வெளியே ஓடினார். சுதாரித்துக் கொண்ட போலீசார் அங்கிருந்து தப்ப முயன்ற 3 பேரை துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்தனர்.
பின்னர் மூன்று பேரையும் தனிப்பிரிவு போலீசார் நாலாட்டின் புதூர் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் மதுரை புது மீனாட்சி நகரை சேர்ந்த சோலையப்பன் மகன் அழகுராஜா என்ற கொட்டு ராஜா ( 29 ), கீரைத்துறை முனியசாமி ( 50 ) மற்றும் கோவில்பட்டி பங்களா தெருவைச் சேர்ந்த தங்கசாமி மகன் தங்கராஜ் ( 28 ) என்பதும், இவர்களில் அழகுராஜா, முனியசாமி ஆகியோர் கூலிப்படையாக செயல்பட்டு வருவதும் தெரிய வந்தது.
அழகுராஜா மீது மதுரையில் 4 கொலை வழக்கு, அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. முனியசாமி மீது 3 கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளும், தங்கராஜ் மீது 4க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகளும் உள்ளது போலீஸ் விசாரணையில் தெரிவந்தது.
இதனையடுத்து லிங்கம்பட்டியில் உள்ள வீட்டில் போலீசார் சோதனை நடத்தியதில் 2 அரிவாள், 2 வாள் மற்றும் கஞ்சா ஆகியவற்றை கைப்பற்றினர். இதை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.