ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி புதிய கட்டிடத்துக்கு நல்லக்கண்ணு பெயர்; முதல்-அமைச்சர் உத்தரவு

 ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி புதிய கட்டிடத்துக்கு நல்லக்கண்ணு பெயர்; முதல்-அமைச்சர் உத்தரவு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் முதுபெரும் பொதுவுடைமைச் சிந்தனையாளரும், விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவருமான தோழர் இரா. நல்லக்கண்ணுவின் 100-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.

நமது மாநிலத்திற்கும், தமிழ் மக்களுக்கும் நல்லக்கண்ணு ஆற்றிய சிறப்பான தொண்டுகளைப் போற்றும்விதமாக, தமிழ்நாடு அரசு 2022-ம் ஆண்டு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கிச் சிறப்பித்தது

. இன்று அவரது நூறாவது பிறந்தநாள் விழாவில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தியபோது, அவர் விடுத்த கோரிக்கையை ஏற்று, அவர் பிறந்த ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையை சி.டி.ஸ்கேன் வசதியுடன் தரம் உயர்த்தி, கூடுதல் வசதிகளுடன் புதிய மருத்துவமனைக் கட்டடம் அமைத்திட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 85 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியையே எப்போதும் தனது தலையாயக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வரும் தன்னலமற்ற தகைசால் தமிழர் தோழர் இரா. நல்லக்கண்ணு பெருமையைப் போற்றும்வகையில், ஸ்ரீவைகுண்டத்தில் அமையவிருக்கும் புதிய மருத்துவமனைக் கட்டிடத்திற்கு “தோழர் நல்லகண்ணு நூற்றாண்டுக் கட்டிடம்” எனப் பெயரிடவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
100-வது பிறந்தநாள் விழா
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் இரா. நல்லகண்ணுவின் 100-வது பிறந்தநாள் விழா சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நடைபெற்றது,

இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நல்லக்கண்ணுவை வாழ்த்த வரவில்லை; அவரிடம் வாழ்த்து பெற வந்திருக்கிறேன். பொதுவுடைமை இயக்கத்துக்கும் நூற்றாண்டு, நல்லக்கண்ணுவுக்கும் நூற்றாண்டு, இப்படி ஒரு பொருத்தம் யாருக்கும் கிடைக்கவில்லை.

எல்லாருக்கும் எல்லாம், சமூகநீதி – சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என பாடுபடுபவர் நல்லக்கண்ணு. அமைதியாக – ஆழமாக சிந்தித்து பேசக்கூடிவர் நல்லக்கண்ணு.

திராவிட மாடல் ஆட்சிக்கு பக்கபலமாக விளங்குபவர் நல்லக்கண்ணு. திமுக ஆட்சி நிறைவேற்றும் திட்டங்களுக்கும் நல்லக்கண்ணு உறுதுணையாக விளங்கி கொண்டிருக்கிறார்.

எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு வழிகாட்டிட வேண்டும் என நல்லகண்ணு அய்யாவைக் கேட்டுக் கொள்கிறேன். 2026 சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறும் அளவுக்கு திமுக கூட்டணி அமைந்திருக்கிறது. கொள்கை கூட்டணியாக மட்டுமல்ல; மதச்சார்பின்மை கூட்டணி, நிரந்தர கூட்டணியாக இருக்கிறோம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *