• February 7, 2025

வரிபாக்கியை  குறைக்க ரூ.3‌‍.5 லட்சம் லஞ்சம்;மதுரையில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் 3 பேர் கைது

 வரிபாக்கியை  குறைக்க ரூ.3‌‍.5 லட்சம் லஞ்சம்;மதுரையில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் 3 பேர் கைது

வரிபாக்கியை  குறைக்க ரூ.3‌‍.5 லட்சம் லஞ்சம் வாங்கியதாக மதுரையில் ஜி.எஸ்.டி.அதிகாரிகள் 3 பேர் கைதாகி உள்ளனர்.

இது பற்றிய விவரம் வருமாறு:-

மதுரையை சேர்ந்தவர் கார்த்திக். இவர் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். இவருக்கான ஜிஎஸ்டி வரி பாக்கி செலுத்துவதற்காக பிபி குளத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் ஜிஎஸ்டி பிரிவில் துணை ஆணையராக இருக்கும் சரவணக்குமாரை அணுகினார்.

அப்போது அவர், ஜிஎஸ்டிவரி பாக்கியில் குறிப்பிட்ட தொகையை குறைப்பதற்கு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை லஞ்சமாகக் கேட்டதாக கூறப்படுகிறது.

இந்தத் தொகையை லஞ்சமாக  கார்த்திக் கொடுக்க விரும்பவில்லை. இதுதொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் அளித்த ஆலோசனைப்படி, பிபி குளம் அலுவலகத்தில் வைத்து ரூ.3.50 லட்சத்தை அந்த அலுவலக கண்காணிப்பாளர்கள் அசோக்குமார், ராஜ்பீர் ராணா ஆகியோரிடம் கார்த்திக் கொடுத்தார்.

அப்போது அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி மறைந்திருந்த சிபிஐ அதிகாரி கலைமணி, இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் குழுவினர் கையும் களவுமாக இருவரையும் பிடித்து விசாரித்தபோது துணை ஆணையர் சரவணக்குமாருக்காக வாங்கச் சொன்னது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மதுரை ஜிஎஸ்டி அலுவலகத்தில் சரவணக்குமார் உள்பட 3  பேரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் கார்த்திக்கிடம் ஜிஎஸ்டி பாக்கியை குறைக்க லஞ்சம் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜிஎஸ்டி துணை ஆணையர் சரவணக்குமார், மற்றும் கண்காணிப்பாளர்கள் அசோக்குமார், ராஜ்பீர் ராணா ஆகிய 3 பேரையும் கைது செய்து, சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் துணை ஆணையர் சரவணக்குமாரின் வீடு அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் சிபிஐ டிஎஸ்பி தலைமையில் 5 பேர் வீட்டை சோதனை செய்வதற்காக சென்று இருக்கிறார்கள்.. அவருடைய  வீடு பூட்டப்பட்டுள்ள நிலையில் வீடு திறக்கப்பட்டதும் வீட்டில் சிபிஐ சோதனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *