கோவில்பட்டியில் இரவு பகலாக மழை ; சகஜ வாழ்க்கை பாதிப்பு
கோவில்பட்டியில் இரவு பகலாக மழை பெய்தது இதனால் மக்களின் சகஜ வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் தீவிர காற்றழுத்த பகுதி நிலைகொண்டு இருக்கிறது. இதனால் கடலோர மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நேற்று தொடர்மழை பெய்தது. கோவில்பட்டியில் நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு மேல் 1 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை காலையிலும் தொடர்ந்து நீடித்தது. பகல் முழுவதும் மழை நிற்கவில்லை. விடாமல் பெய்து கொண்டே இருந்தது.
காற்று வீசாமல் மழை பெய்துகொண்டே இருந்தது. இடைவிடாது சாரல் மழையாக பெய்த காரணத்தினால் மக்களின் சகஜ வாழ்க்கை பாதித்தது. காலை நேரத்தில் நடை பயிற்சி செல்வோர் பாதிக்கப்பட்டனர்.அதிகாலை நேரத்தில் காய்கறி மார்க்கெட்டில் லாரிகளில் இருந்து காய்கறிகளை இறக்குவதில் சிரமம் ஏற்பட்டது.
மேலும் சிறு வியாபாரிகள் இரு சக்கர வாகனங்களில் மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்வதில் சிரமம் அடைந்தனர். நடை பாதை வியாபாரிகள் குடை பிடித்தபடி அமர்ந்து வியாபாரத்தில் ஈடுபட்டதை காணமுடிந்தது.
மொத்தத்தில் நேற்று சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன, கடைவீதிகளில் கூட்டம் குறைவு காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்,.
தொடர் மழையினால் நேற்று பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.