கடை வாடகை மீதான 18 சதவீத ஜிஎஸ்டியை திரும்ப பெற வலியுறுத்தி வணிகர்கள் ஆர்ப்பாட்டம்
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தூத்துக்குடியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடை வாடகை மீதான 18 சதவித ஜி.எஸ்.டி.,யை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், ஆண்டுதோறும் 6 சதவீத சொத்து வரி உயர்வு மற்றும் வணிக உரிமைக் கட்டண உயர்வு, தொழில் வரி உயர்வு ஆகியவற்றை திரும்ப பெறவேண்டும். குப்பை வரியை மாநிலம் முழுவதும் சீராக்க வேண்டும் என்பன உள்பட வரி சுமையை குறைக்க தமிழக அரசை வலியறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையொட்டி தூத்துக்குடியில் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி மண்டல தலைவர் ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக மாநில துணைத்தலைவர் வெற்றி ராஜன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
கோவில்பட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தூத்துக்குடி தலைவர் சோலையப்ப ராஜா, திருச்செந்தூர் தலைவர் பாஸ்கர், மாவட்டச் செயலாளர் மகேஸ்வர சிங், மாவட்ட பொருளாளர் ஆனந்த பொன்ராஜ் மற்றும் மாவட்ட முழுவதும் இருந்து ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டனர். வணிகர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக வெற்றிக் கழகம் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆகனஸ் கலந்து கொண்டு பேசினார்.