தூத்துக்குடியில் பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக் கொலை
![தூத்துக்குடியில் பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக் கொலை](https://tn96news.com/wp-content/uploads/2024/12/tuty-young.jpg)
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை கூட்டாம்புளி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் வெள்ளகண்ணு (26). கட்டிட வேலை செய்து வந்தார், இவர் நேற்று காலை 9.30 மணியளவில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார், அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் அவரை சூழ்ந்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
இந்த கொடூர தாக்குதலில் இருந்து தப்பிக்க வழியில்லாமல் சம்பவ இடத்திலேயே கீழே சாய்ந்த வெள்ளகண்ணு ரத்த வெள்ளத்தில் பிணமானார், இதை தொடர்ந்து கொலையாளிகள் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்று விட்டனர், இந்த கொலை சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் அதிர்ச்சி அடைந்தனர், அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை..
இதுகுறித்து தகவல் அறிந்து புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெள்ளகண்ணு உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், ரூரல் டி.எஸ்.பி. சுதிர் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு கூட்டாம்புளி அருகிலுள்ள போடம்மாள்புரத்தைச் சேர்ந்த ராஜ்குமார், ராஜேஷ், சதீஷ்குமார், பாண்டி, குமார் ஆகியோர் அப்பகுதியில் உள்ள குளத்துக் கரையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார்களாம். அப்போது, அங்கு வந்த வெள்ளக்கண்ணு மற்றும் அவரது நண்பர்கள் அவர்களிடம் தகராறு செய்ததில் ராஜ்குமார் மற்றும் அவரது நண்பரான ராஜேஷ் ஆகிய இருவரையும் அரிவாளால் வேட்டினார்களாம்.
இதில் படுகாயம் அடைந்த ராஜ்குமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக வெள்ளைக்கண்ணு உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் வெள்ளக்கண்ணு உள்ளிட்டோர் கைதானோர் ஜாமீனில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியே வந்துள்ளனர். இதனை அறிந்த ராஜ்குமார் ,நண்பர்கள் 3 பேருடன் வந்து வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த வெள்ளக்கண்ணுவை அரிவாளால் வெட்டி தப்பிச் சென்றது தெரிய வந்துள்ளது. மேலும், இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)