விமர்சனம் என்ற பெயரில் அவதூறு பரப்பினால் காவல் துறையிடம் புகார் அளிக்கலாம்: சென்னை ஐகோர்ட்

 விமர்சனம் என்ற பெயரில் அவதூறு பரப்பினால் காவல் துறையிடம் புகார் அளிக்கலாம்: சென்னை ஐகோர்ட்

நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான கங்குவா படம் குறித்து சமூக ஊடகங்களில் எதிர்மறை விமர்சனங்கள் வெளியாகின. இதேபோல மேலும் சில படங்கள் எதிர்மறை விமர்சனங்களால் வியாபார ரீதியாக பாதிக்கப்பட்டதாக கூறி, படங்கள் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், “புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களை வெளியிடுவது தொடர்பாக விதிமுறைகளை வகுக்க மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.
பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும் போது, அவை குறித்து எதிர்மறை விமர்சனங்கள் வெளியிடப்படுவதால் படங்கள் தோல்வி அடைகின்றன. இதனால் திரைத்துறையில் அசாதாரண சூழல் நிலவுகிறது” எனக்கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சவுந்தர் முன் நேற்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், “புதிதாக வெளியாகும் திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியாவதால், படத்தை பார்க்க விரும்பும் மக்களின் மனநிலை மாறுகிறது. படத்தில் நடித்த நடிகர், இயக்குனர் குறித்து அவதூறு பரப்பப்படுகின்றன” என தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, விமர்சனம் என்ற பெயரில் அவதூறு பரப்பினால் காவல் துறையிடம் புகார் அளிக்கலாம். விமர்சனம் கருத்து சுதந்திரம் என்பதால், பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. சில படங்கள் நல்ல விமர்சனங்களை பெறுகின்றன. அதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார். மேலும், திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனங்கள் வெளியிட தடை விதிக்க மறுத்த நீதிபதி, வழக்கு தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய-மாநில அரசுகள் மற்றும் யூடியூப் நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *