மாமல்லபுரம் அருகே கார் மோதியதில் மாடு மேய்த்து கொண்டிருந்த 5 பெண்கள் பரிதாபமாக பலி

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பண்டிதமேடு என்ற பகுதியில் 5 பெண்கள் மாடு மேய்த்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சாலையோரம் அமர்ந்திருந்தாக கூறப்படுகிறது. அச்சமயத்தில் அவ்வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று 5 பேர் மீதும் பலமாக மோதியது. இதில் 5 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண்கள் பண்டிதமேடு பகுதியை சேர்ந்த லோகாம்பாள், விஜயா, யசோதா, ஆனந்தம்மாள் மற்றும் கௌரி என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய நபர்களை அப்பகுதி மக்கள் சரமாரியாக அடித்துள்ளனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து ஏற்படுத்திய நபர்களை கைது செய்தனர். இந்த நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை கைது செய்யக்கூடாது எங்களிடம் ஒப்படையுங்கள் என்றனர். கைது செய்யப்பட்ட 2 பேரை போலீசார் காவல் வாகனத்தில் வைத்துள்ளனர்.
காவலர்கள் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு அவர்களை வெளியேற்ற வேண்டும். எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய காரில் மொத்தத்தில் 4 பேர் இருந்துள்ளனர். அதில் ஒரு பெண் உட்பட 2 பேர் தப்பி சென்றதாகவும். 2 பேர் மட்டும் சிக்கி கொண்டதாகவும் கூறப்படுகின்றன.
