• April 19, 2025

பணி நியமன ஆணை வாங்கும் காவலர்கள் எதிர்காலத்தில் விருதுகளை வாங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

 பணி நியமன ஆணை வாங்கும் காவலர்கள் எதிர்காலத்தில் விருதுகளை வாங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் உள்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 3359 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 1000 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

பணி நியமன ஆணைகளை வழங்கிய பின்னர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

திமுக ஆட்சியில் தான் முதன் முதலில் காவல் ஆணையம் அமைத்ததுடன், அதிக எண்ணிக்கையில் காவல் ஆணையங்கள் அமைத்து பல்வேறு முன்னோடி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 17 ஆயிரம் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சிதான் காவல்துறையின் பொற்காலமாக அமைந்துள்ளது.

காவல்துறை பணியில் சேர்ந்தவர்கள் கடும் உழைப்பால் இங்கு வந்துள்ளீர்கள். உங்களுக்கு ஏராளமான கடமைகள் உள்ளன. குற்றங்களை குறைப்பது என்பதை விட குற்றங்களே நடைபெறாமல் பார்ப்பது தான் சாதனை. தற்போதைய சூழலில் உங்கள் முன் சைபர் குற்றஙகள், போதைப்பொருள் ஒழிப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைப்பது போன்றவை உள்ளன.

உங்களை நாடி வரும் பொதுமக்களிடம் கனிவாக பேசி அவர்கள் குறைகளை கேட்க வேண்டும். சமூகநீதி பார்வையும், மதச்சார்பின்மையும் நிச்சயம் உங்களுக்கு முக்கியம். சாதிய பாகுபாடு பார்க்க கூடாது. மாநிலம் அமைதியாக இருந்தால் தான் புதிய தொழிற்சாலைகள் வரும். குற்றங்களே இல்லை என்பதுதான் உங்களின் சாதனையாக இருக்க வேண்டும். குறிப்பாக குற்றங்களை முழுமையயாக குறைப்பதே உங்களது டிராக் ரெக்கார்டாக இருக்க வேண்டும். தற்போது என்னிடம் பணி நியமன ஆணை வாங்கும் காவலர்கள், எதிர்காலத்தில் என்னிடம் விருது பெற வேண்டும்.

அதிகாரிகளை ஒன்று கேட்டு கொள்கிறேன். உங்கள் கீழ் பணியாற்றும் காவலர்களுக்கு உங்கள் மீது மரியாதை இருக்க வேண்டும். பயம் இருக்கக்கூடாது. அனைவரையும் அரவணைத்து நடத்துங்கள். குற்றவாளிகளை கண்டுபிடித்து விட்டோம் என்று கூறுவது சாதனை இல்லை. குற்றங்கள் நடைபெறாமல் தடுத்துவிட்டோம் என்று கூறுவது தான் நம்முடைய சாதனையாக இருக்க வேண்டும். காக்கி சட்டையை அணியும் இந்த நாளில் இருந்து அதற்கான உறுதியை எடுத்து கொள்ள வேண்டும்.

வேலைக்கு சேர்ந்த புதிதில்தான் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஆனால், காலப்போக்கில் சோர்ந்துவிடுவார்கள் என்று பொதுவாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இன்று பணியில் சேரும்போது உங்களிடம் இருக்கும் மிடுக்கும், போலீஸ் என்ற கம்பீரமும், ஓய்வுபெறும் வரை இருக்க வேண்டும். உங்களது பெயரை சொன்னாலே தமிழகம் பெருமைப்பட வேண்டும். பணியோடு சேர்த்து உங்களுடைய உடல்நலனிலும் கவனம் கொள்ளுங்கள். குடும்பத்தோடு நேரம் செலவிடுங்கள். நவீன காலத்துக்கு ஏற்ற வகையில், தொழில்நுட்ப ரீதியாகவும் உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *