பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் வலியுறுத்தல்
கோவில்பட்டியில் அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 70 வயது அடைந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள், வன காவலர்கள், பட்டு வளர்ச்சித்துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும். காப்பீடு திட்டத்தின் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். டிரேக்கிங் சிஸ்டத்தை அமல்படுத்த வேண்டும். கமுட்டேஷன் பிடித்தம் செய்யும் காலத்தை 10 ஆண்டுகாலமாக குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டத்தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.. வட்ட இணைச் செயலாளர் வடிவேல் முன்னிலை வகித்தார்.வட்ட செயலாளர் ராமலிங்கம், பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கத்தைச் சேர்ந்த சிந்தாமதார் பக்கீர்,மாவட்ட இணைச் செயலாளர் ஜெகநாதன். அரசு ஊழியர்கள் சங்க வட்டச் செயலாளர் பிரான்சிஸ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஓய்வூதியர் சங்க வட்ட துணைத் தலைவர் மகேஸ்வரன், இணை செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.