காங்கிரஸ் எப்போதுமே மக்களுக்காக நாடாளுமன்றத்தில் பேசியதில்லை: பிரதமர் மோடி
![காங்கிரஸ் எப்போதுமே மக்களுக்காக நாடாளுமன்றத்தில் பேசியதில்லை: பிரதமர் மோடி](https://tn96news.com/wp-content/uploads/2024/11/modi-1-850x560.jpg)
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி, டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கூட்டதொடரில், வக்பு வாரிய திருத்த மசோதா உட்பட 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற கூட்ட தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி பேசியதாவது:
நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஆக்கபூர்வமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அதிகார பசியை கொண்ட கட்சியை வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர். அந்த விரக்தியில் சில கட்சிகள் நாடாளுமன்றத்தை சீர்குலைக்கு முயற்சி செய்கின்றன.
மக்கள் அவர்களை மீண்டும் மீண்டும் நிராகரிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப எதிர்க்கட்சிகள் எப்போதுமே செயல்பட்டதில்லை. அதுவும், காங்கிரஸ் எப்போதுமே மக்களுக்காக நாடாளுமன்றத்தில் பேசியதில்லை. எதிர்க்கட்சியினர் இனியாவது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நாடாளுமன்றத்தின் மாண்புகளை பின்பற்ற வேண்டும். நாடாளுமன்றத்தில் பொறுப்புடன் செயல்படக்கூடிய முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஆனால் சில எதிர்க்கட்சிகள் பொறுப்புடன் நடந்து கொள்கின்றன. நாடாளுமன்றத்தின் அலுவல்கள் சுமுகமாக நடைபெற வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். நாடாளுமன்றத்தின் அலுவல் நேரத்தை மாண்புடன் பயன்படுத்துவதில் இந்தியாவின் சர்வதேச மரியாதையும் உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)