கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
கோவில்பட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அண்ணா பஸ் நிலையத்தில் 49 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளது.
பஸ் நிலையத்தின் ஒரு பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்காக சாலையை உடைக்கும் பணி இன்று நடைபெற்றது. இந்த பகுதியில் பணிகள் முடிந்தவுடன் மற்ற பகுதிகளில் வேலை நடைபெறும்.
சீரமைப்பு பணிகள் தொடங்கி உள்ளதால் போக்குவரத்து மாற்றம் குறித்து நகராட்சி நிர்வாகம் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்தது.
அதன்படி அண்ணா பேருந்து நிலையத்தின் முன்பகுதியில் முனியசாமி கோவில் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மினி பேருந்துகள் நிறுத்தி செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.
மினி பேருந்துகள் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து ஆர்த்தி மருத்துவமனை நகர பேருந்து நிலையம் வழியாக நுழைவாயில் அருகில் உள்ள சாலை வழியாக நிறுத்தம் செய்து பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன,
தென்காசி மற்றும் திருநெல்வேலியில் இருந்து வரும் பேருந்துகள் ராமசாமி தாஸ் பூங்கா அருகே திருநெல்வேலி பிரதான நெடுஞ்சாலையில் நிறுத்தி பயணிகள் ஏற்றி இறக்கி சென்றன,
குருவிகுளம், கயத்தாறிலிருந்து வரும் தனியார் மற்றும் அரசு நகர பேருந்துகள் நகர பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை அமலுக்கு வந்து விட்டது. கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் நகர்மன்ற தலைவர் கருணாநிதி, நகராட்சி ஆணையர் கமலா, கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
மக்களுக்கு சிரமம் ஏற்படாமல் சீரமைப்பு பணி நடைபெற வேண்டும் என்பது பற்றியும் , அதே சமயம் பஸ் நிலையத்துக்கு வெளியே போக்குவரத்து நெருக்கடி ஏற்படாத வகையில் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று சீரமைப்பு பணியை கவனித்து வரும் அதிகாரிகளிடம் கேட்டுகொண்டனர்.