திருமாவளவன் எங்களுடன் தான் இருக்கிறார்: அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை பரபரப்பு பேச்சு
விடுதலை சிறுத்தைகள் கட்சி, திமுகவுடன் கூட்டணியில் இருந்து வருகிறது. இந்த சூழலில் “ஆட்சி அதிகாரத்தில் பங்கு” என்கிற ரீதியில் விசிகவில் கருத்துகள் எழுந்த நிலையில், இது விவாதமாக மாறியது. அண்மையில், தவெக தலைவர் விஜய்யும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என பேசி இருந்தார். அதை தொடர்ந்து சில கட்சிகள், கூட்டணியிலும் பங்கு, ஆட்சியிலும் பங்கு என்னும் கருத்தை வைத்து விசிகவுக்கு தொடர்ந்து மறைமுகமாக வலை வீசி வருகின்றன.ஆனால், திமுக கூட்டணி என்பதில் உறுதியாக இருப்பதாக திருமாவளவன் திட்டவட்டமாக கூறி வருகிறார்.
இந்நிலையில், முன்னாள் எம்எல்ஏவும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளருமான இன்பதுரை, இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் பேசினார்.
இன்பதுரை பேசியதாவது: “திருமாவளவன் எங்கு செல்வார் என இன்று தமிழ்நாடே பார்த்து கொண்டிருக்கிறது. அவர் இங்குதான் இருக்கிறார், எங்களுடன் தான் இருக்கிறார். நான் அரசியல் பேச வரவில்லை. வழக்கறிஞர்கள் எங்கு இருந்தாலும் அவர் வருவார் என தெரியும்” இவ்வாறு பேசினார்.
அதிமுக நிர்வாகி இன்பதுரை பேச்சால் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டணி தொடர்பாக விசிக-வை முன்வைத்து விவாதங்கள் நடந்து வரும் சூழலில், இன்பதுரையின் இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.