• November 16, 2024

நெல்லையில் பரபரப்பு : `அமரன்’ திரைப்படம் ஓடும் சினிமா தியேட்டர் மீது பெட்ரோல் குண்டுவீச்சு – 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை

 நெல்லையில் பரபரப்பு : `அமரன்’ திரைப்படம் ஓடும் சினிமா தியேட்டர் மீது பெட்ரோல் குண்டுவீச்சு – 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி தீபாவளியன்று அமரன் படம் வெளியானது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த படம், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ளது.
இப்படத்தில் முகுந்த் வேடத்தில் சிவகார்த்திகேயனும், அவருடைய மனைவி இந்து ரெபேக்கா வேடத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இப்படம் இதுவரை ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது.

இந்த படம் அனைவராலும் பாராட்டப்பட்டபோதிலும், ஒரு சில எதிர்ப்புகளும் கிளம்பி வருகின்றன. திரைப்படத்தில் காஷ்மீரில் உள்ள இஸ்லாமிய மக்களை, தீவிரவாதிகள் போன்று சித்தரித்துள்ளனர் என கூறி எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதனால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கம், விருகம்பாக்கம், வடபழனியில் உள்ள கமலா திரையரங்கம் மற்றும் போரம்மாலில் உள்ள திரையரங்கிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நெல்லையில் மேலப்பாளையம் பகுதியில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்க வளாகத்திற்குள் இன்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் சிலரால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடி விட்டனர். மொத்தம் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு உள்ளன.

இதனால், பொருட்சேதம் எதுவும் இல்லை. சம்பவம் பற்றி சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 2 தனிப்படையும் , உதவி ஆய்வாளர்கள் தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது .தென்மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட திரையரங்கை முற்றுகையிட்ட இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர் . திரையரங்கில் இந்து முன்னணியின் மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் ஆய்வு செய்வதற்காக, தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்திருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை துணை ஆணையர் விஜயகுமார், தலைமையிலான போலீசார் இந்து முன்னணியினரை கைது செய்தனர். பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ததாக போலீசார் விளக்கமளித்துள்ளனர்.

சினிமா தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் நெல்லையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *