பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணியில் உள்ளது- ஜெயக்குமார்
பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணியில் உள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ‘கள ஆய்வுக் குழு’ ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது அக்குழுவுக்கு பல்வேறு ஆலோசனைகளை எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ஜெயக்குமார் கூறியதாவது:-
களப்பணிகள் ஆய்வு குழுவை பொறுத்தவரை பல அறிவுரைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அது கட்சி ஆலோசனை, அதை வெளியில் கூற விரும்பவில்லை. பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை. இன்று, நாளை என பாஜகவுடன் இப்போதும் கூட்டணி இல்லை, எப்போதும் கூட்டணி இல்லை. இதுதான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் எந்த வகையிலும் மாற்றமில்லை. உள்ளத்தில் ஒன்று உதட்டில் ஒன்று என திமுகவை போல ஒரு மறைமுக கூட்டணியில் அதிமுக இருக்காது.
திமுக எம்பிக்கள் வைக்கும் பார்ட்டியில் ஜெபி நட்டா கலந்து கொள்கிறார். அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிக்கு ராஜ்நாத் சிங்கை அழைக்கிறார்கள். உதயநிதி, பிரதமரை சந்திக்கிறார் என்றால் எந்த அளவுக்கு திமுகவும், பாஜகவும் மறைமுகமான இணக்கத்துடன் உள்ளது. பாஜகவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்துடனும் திமுக செயல்படுகிறது. இந்த நிலை அதிமுக பொறுத்தவரை கிடையாது. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.