‘மாடுகளை சாலையில் விடாதீர்கள்’ – நடிகை நிக்கி கல்ராணி
அப்சரா ரெட்டியின் அறக்கட்டளை சார்பாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் விலங்குகளின் பராமரிப்பிற்காக 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது. இதில் நடிகை நிக்கி கல்ராணி கலந்து கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
“நாம் வீடுகளில் செல்லப் பிராணிகளை வளர்ப்பது போல், உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளை தத்தெடுத்து, அவற்றின் பராமரிப்பு செலவுகளுக்கு நம்மால் முடிந்த தொகையை வழங்கலாம். எனக்கு சிறுவயதில் இருந்தே விலங்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். நாய்கள், பூனைகள் மட்டுமின்றி, அனைத்து விலங்குகள் மீதும் நாம் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
>மாடுகளை வளர்ப்பவர்கள் அவற்றை சாலைகளில் விடுவதை பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதுவும் ஒரு உயிர்தான். மாடுகளை நாங்கள் கடவுள் போல் பார்க்கிறோம். எனவே தயவுசெய்து அவற்றை சாலையில் விட வேண்டாம்.”
இவ்வாறு நிக்கி கல்ராணி தெரிவித்தார்.