இரும்புகம்பி ஏற்றி வந்த லாரி மீது பஸ் மோதியதில் 7 பேர் காயம்
மதுரையிலிருந்து இன்று அதிகாலை நாகர்கோவில் நோக்கி, அரசு பஸ் ஒன்று சென்றது. இந்த பஸ்சை கன்னியாகுமரி காந்திகிராமகோடு குளிச்சவிளை பகுதியை சேர்ந்த எட்வின் குமார் என்பவர் ஓட்டினார்.
இந்த பஸ் கோவில்பட்டி பைபாஸ் சாலையில் தொட்டிலோவன்பட்டி மேம்பாலத்தில் வந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த சென்னையில் இருந்து மார்த்தாண்டத்திற்கு இரும்பு கம்பி ஏற்றிச் சென்ற லாரி மீது அரசு பஸ் மோதியது.
இதை சற்றும் எதிரபாராத பஸ்பயணிகள் அலறினார்கள். பஸ் முன்பக்க கண்ணாடி உடைந்து பஸ்சில் அமர்ந்திருந்த பயணிகள் சிலர் மீது இரும்பு கம்பிகள் குத்தின.
இதில் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த ஜோஸ், ஜெகநாதன், சதீஷ், கழுகுமலை பகுதியை சேர்ந்த அபிநயா, மலர்க்கொடி, புதுக்கோட்டை சேர்ந்த ராஜேஸ்வரி தஞ்சாவூரை சேர்ந்த சந்தன யாகப்பன் ஆகிய 7 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்