திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா: பக்தர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள்
![திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா: பக்தர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள்](https://tn96news.com/wp-content/uploads/2024/11/kanthasati.jpg)
Arulmigu Subramaniya Swamy Templer is an ancient Hindu temple dedicated to Lord Murugan.The temple is situated along the shores of the Bay of Bengal Thiruchendur State Tamil Nadu India
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா நாளை துவங்குகிறது. இதையடுத்து பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா நாளை சனிக்கிழமை தொடங்க உள்ளது.
இதையடுத்து, பக்தர்களின் வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறது.. இந்தாண்டு கந்தசஷ்டி பெருவிழா நாளை சனிக்கிழமை நவம்பர் 2-ம் தேதி துவங்கி, நவம்பர் 7-ம் தேதி சூரசம்ஹாரமும், நவம்பர் 8-ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.
கந்தசஷ்டி விரதத்தின் முதல் 5 நாட்களுக்கு தினமும் 1 லட்சம் பேரும், சூரசம்ஹாரத்தன்று 6 லட்சம் பேரும், திருக்கல்யாணத்திற்கு 2 லட்சம் பேரும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் தேவைக்கேற்ப, வாகனங்கள் நிறுத்துமிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி 181 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும், கோபுரங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
விழா நாட்களில் 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவசர சிகிச்சை, மருத்துவ உதவிக்கு முக்கிய இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளன.
சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு 18 இடங்களில் 1.30 லட்சம் சதுரடியில் நிழல் கொட்டகைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படுகின்றன. கொட்டகைகள் அனைத்தும் மழை நேரத்தில் பக்தர்கள் சிரமமின்றி தங்குவதற்காக தகரத்தால் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த தற்காலிக கொட்டகையில் 6,500 பக்தர்கள் வரை தங்கி விரதம் மேற்கொள்ளலாம்.
பக்தர்களின் வசதிக்காக கோயில் வளாகத்தில் ஏற்கனவே உள்ள 225 நிரந்த கழிவறைகள் தவிர கூடுதலாக 190 தற்காலிக ஆண், பெண் கழிவறைகள் அமைக்கப்பட்டு வருகிறது. 100 இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் விரைவாக தரிசனம் செய்ய சிறப்பு வழிகள் அமைக்கப்பட உள்ளது. கந்தசஷ்டி திருவிழாவின் போது நாள் முழுதும் அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. பொது தரிசன வரிசையில் இந்தாண்டு அடிப்படை வசதிகளுடன் ‘கியூ காம்பிளக்ஸ்’ அமைக்கப்பட்டுள்ளது. கடலில் நீராடும் பக்தர்களின் பாதுகாப்புக்கு பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
திருவிழாவின் போது நடைபெறும் யாகசாலை பூஜை, தங்க ரதம் வீதி உலா மற்றும் இதர நிகழ்ச்சிகளை பக்தர்கள் அகன்ற திரையில் கண்டுகளிக்க 15 எல்இடி டிவிக்கள் வைக்கப்பட உள்ளது.
விழா நாட்களில் கோவில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களை பராமரிக்க 400 துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். திருச்செந்தூருக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கவும், தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)