ரசிகர் கொலை வழக்கு: கன்னட நடிகர் தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன்
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ரேணுகாசாமி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கன்னட நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 17 பேர் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டனர். இதில், நடிகர் தர்ஷன் பல்லாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைச்சாலையில் தர்ஷன் மூவருடன் சுற்றி திரிந்த படங்கள் சமீபத்தில் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, அவர் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து மாற்றப்பட்டார்.
இந்த நிலையில், நடிகர் தர்ஷனுக்கு அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டும் என அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதுகுறித்த இருதரப்பு விசாரணைகளின் முடிவில், நடிகர் தர்ஷனுக்கு கர்நாடக ஐகோர்ட் 6 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, இவருடைய இடைக்கால ஜாமீனுக்கு அரசு தரப்பு வக்கீல் ஆட்சேபனை தெரிவித்தார். தர்ஷனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கினால், அவர் சாட்சிகளை அழிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இடைக்கால ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவித்திருந்தார். நடிகர் தர்ஷன் தரப்பு வழக்கறிஞரோ, உடனே அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.அவர் சாட்சிகளை அழிக்க முயற்சிக்க மாட்டார். எனவே அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்நிலையில், இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. நீதிபதி தனது உத்தரவில், தர்ஷன் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், மேலும் 7 நாட்களுக்குள் அவர் விரும்பும் மருத்துவமனையில் சிகிச்சை பற்றிய விவரங்களை அளிக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.