சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவை மீண்டும் தொடக்கம்

 சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரெயில் சேவை மீண்டும் தொடக்கம்

சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே 14 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் ரெயில் சேவை இயக்கப்படுகிறது. சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 3 வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 2 வழித்தடங்களில் மின்சார ரெயில்களும், ஒரு வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்படுகின்றன. இதனால் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில்கள் கடற்கரை – எழும்பூர் இடையே செல்லும்போது அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

இதற்கு தீர்வு காணும் வகையில் 4.5 கி.மீ தொலைவுக்கு ரூ.279 கோடி மதிப்பீட்டில் கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது வழித்தடம் அமைக்கும் பணிக்கு ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.

இதை தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 27-ந் தேதி 4-வது வழித்தடம் அமைக்கும் பணி தொடங்கியது. இதனால் கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையில் பறக்கும் ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது 7 மாதங்களுக்கு, அதாவது 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்தது.

அதன்படி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி இடையில் மட்டுமே பறக்கும் ரெயில் சேவை இயக்கப்பட்டு வந்தது. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு பயணித்து வந்தனர்.

இந்தநிலையில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில், 14 மாதங்களுக்கு பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் பறக்கும் மின்சார ரெயில் சேவை இயக்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இன்று முதல் இருமார்க்கமாகவும் 90 ரெயில்கள் இயக்கப்பட்டு உள்ளன.சில பணிகள் முடிந்தபிறகு முழுமையான ரெயில் சேவை தொடங்கும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் வெகுநாட்களுக்கு பிறகு ரெயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். கடற்கரை – வேளச்சேரி வரை காலை 4.53 முதல் இரவு 11.13 வரை 25 நிமிட இடைவேளையில் 45 ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதேபோல் மறுமார்க்கமாக வேளச்சேரி – கடற்கரை வரை காலை 4 முதல் இரவு 10.20 வரை 25 நிமிட இடைவேளையில் 45 ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

இதனிடையே, வேளச்சேரியில் இருந்து வரும்ரெயில்களும் சரி, கடற்கரையில் இருந்து வேளச்சேரி நோக்கி செல்லும் ரெயில்களும் சரி, சென்னை பார்க் டவுன் ரெயில் நிலையத்தில் (சென்ட்ரல்) தற்காலிகமாக நிற்காது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. ஏனெனில் அங்கு பிளாட்பார்ம் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. அங்கு சில பணிகள் பாக்கி உள்ளது. அந்த பணிகள் முடிந்த பின்னரே பார்க் டவுன் ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நிற்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *