தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து இன்று முதல் 14,086 சிறப்பு பஸ்கள் இயக்கம்

 தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து இன்று முதல் 14,086 சிறப்பு பஸ்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் 4,900 சிறப்பு பஸ்கள், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 2,910 சிறப்பு பஸ்கள் இயக்க போக்குவரத்து துறைநடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, இன்று வழக்கமான பஸ்களுடன் சென்னையில் இருந்து 700 பஸ்களும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பிற முக்கிய பகுதிகளுக்கு 330 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த 3 நாட்களுக்கு 14,086 பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழக அரசு பஸ்களில் பயணிக்க இதுவரை 1.22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து மட்டும் பஸ்கள் வாயிலாக 5 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், பொள்ளாச்சி, ராமேசுவரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், விருத்தாச்சலம், அரியலூர், திட்டக்குடி, செந்துறை, ஜெயங்கொண்டம், போளூர், வந்தவாசி மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பஸ்கள் திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக பட்டுக்கோட்டை, மன்னார்குடி செல்லும் அனைத்து வழித்தட பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்படும்.

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சீபுரம், செய்யாறு, ஓசூர் மற்றும் பெங்களூர் செல்லும் பஸ்கள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பஸ்கள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம், திருவாரூர் மற்றும் திருத்துறைபூண்டி செல்லும் பஸ்கள் இயக்கப்படும்.

பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பஸ்கள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதனிடையே கிளாம்பாக்கத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர்,

“கிளாம்பாக்கத்தில் அரசு பஸ்கள், ஒப்பந்த அடிப்படையிலான தனியார் பஸ்கள், ஆம்னி பஸ்களை நிறுத்திவைக்க போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2,000 பேர் அமர இருக்கை, இலவச மருத்துவமனை, ஆம்புலன்ஸ், பாதுகாப்புக்காக காவல் அதிகாரிகள், 3 மடங்கு அதிகமாக தூய்மை பணியாளர்கள், 8 ஏடிஎம் இயந்திரங்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் 18 இயந்திரங்கள், தாய்மார்கள் பாலூட்ட 3 அறைகள், இலவச டிராலிகள், 140 தங்குமிடம் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் நெரிசல் இல்லாமல் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *