கரையை கடந்தது டானா புயல்: ஒடிசாவில் பலத்த சேதம்-வேரோடு சாய்ந்த மரங்கள்
மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த டானா, தீவிர புயலாக நள்ளிரவில் 6 மணி நேரமாக 12 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்த புயல், வடக்கு ஒடிசாவின் பிதார்கனிகா மற்றும் தமாரா இடையே இரவு 1.30 மணி முதல் 3.30 மணி வரை கரையை கடந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி புயல் கரையை கடக்கையில் மணிக்கு 100-110 முதல் 120 கி.மீ. வேகத்தில் சூறை காற்று வீசியதாகவும், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், டானா புயல் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, ஒடிசா மற்றும் மேற்குவங்க கடலோரப் பகுதியில் பாதிப்புக்குள்ளான இடங்களிலிருந்து 11 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
இருந்தாலும், 120 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியதால் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள சிறப்பு நிவாரண ஆணையர் அலுவலகத்தில் மரங்கள் வேரோடு சாய்ந்ததாக தகவல் கிடைத்தது. பலத்த காற்று மற்றும் கனமழையால் வன்சாபா, பத்ரக் மற்றும் தாம்ரா உட்பட பல பகுதிகளில் பல மரங்கள் விழுந்து சில கட்டிடங்களுக்கு சேதம் விளைவிக்கும் சம்பவங்களும் அரங்கேரியுள்ளது.
தற்பொழுது, சாலைகளில் முறிந்து விழுந்த மரங்கல் மீட்பு குழுவினரால் அகற்றப்பட்டு வருகிரது. மேலும் அப்பகுதி முழுவதும் பல சாலைகள் மூடப்பட்டு அனைத்து போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டன. இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பத்ரக், கேந்திரபாரா, பாலசோர் மற்றும் ஜகத்சிங்பூர் மாவட்டங்களில் மணிக்கு 110 கிமீ வேகத்தில் காற்றின் வேகம் மற்றும் மிகக் கனமழை பெய்தது. இதன் காரணமாக, ஒடிசாவில் டானா புயல் காரணமாக 16 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், கொல்கத்தா விமான நிலையத்தில் நேற்று மாலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 9 மணி வரை விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதேபோல், புவனேஸ்வர் விமான நிலையமும் நேற்று மாலை 5 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 9 மணி வரை மூடப்பட்டது.
டானா புயல் எதிரொலியாக இரு மாநிலங்கள் வழியாக செல்லும் 400க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொல்கத்தா துறைமுக அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாலை வரை கப்பல் சேவையை நிறுத்தி வைத்துள்ளனர்.