கோடி அவதாரம் எடுத்து அசுரனை அழித்த தஞ்சை கோடி அம்மன்
தஞ்சை கோடி அம்மன் கோவில் தற்போது இருக்கும் பகுதி தேவர்கள் தவம் செய்த சோலைவனமாக இருந்தது. அங்கிருந்தபடியே அவர்கள் இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்களுக்கு இணையாக இறைவனை வழிபட்ட தஞ்சன் என்ற அசுரன் தேவர்களுக்கும் அதிகமான தகுதியைப் பெற்றான். தன்னுடைய சக்தியின் காரணமாக தேவர்களை துன்பம் செய்துவந்தான். தேவர்கள் ஒன்றுகூடி சிவனிடம் தஞ்சம் புகுந்தனர்.
எனவே இறைவன் தஞ்சபுரீஸ்வரர் எனப்பட்டார். அவர் தனது அம்பிகையான ஆனந்தவல்லியிடம் தஞ்சனை அழிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார்.ஆனந்தவல்லி பச்சைக்காளியாக வடிவெடுத்து அசுரனை அழிக்க வந்தாள். அசுரனோ, அழிய அழிய மீண்டும் தோன்றினான். இவ்வாறு கோடி அவதாரங்கள் எடுத்தான்.
இதனால் கோபமடைந்த ஆனந்தவல்லியின் முகம் சிவந்தது. அவள் சாந்தத்தை கைவிட்டு பவளக்காளியாக மாறினாள் (பவளம் – சிவப்பு நிறம்).
தஞ்சனை வதம் செய்தாள், தஞ்சனின் உடலிலிருந்து பெருகிய ரத்தம் ஆறாக ஓடியது. அந்த எதிரொளிப்பில் அம்பாளின் உருவமே சிவப்பானது. கோடி அவதாரம் எடுத்த அசுரனை அழித்ததால் அம்பாள் கோடி அம்மன் என்றும் வழங்கப்பட்டாள்.
சிவபெருமான் தலையில் கங்கையை சூடியிருப்பது தெரிந்த விஷயம். ஆனால், இங்கே அம்பாள் தனது தலையில் சிவபெருமானையே சூடியிருக்கிறாள். எனவே இந்த கோவிலில் அம்மனுக்குரிய சிங்க வாகனத்திற்கு பதிலாக நந்தி வாகனம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கோயிலில் பூஜை நடக்கும்போது சற்று தொலைவில் உள்ள ஆனந்தவல்லி சமேத தஞ்சபுரீஸ்வரர் கோயிலிலும் பூஜை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பாளிடம் சிக்கிய அசுரன் இறக்கும்போது ஊரின் பெயர் அழகாபுரி என இருந்தது. அவனது வேண்டுகோளுக்கு இணங்க, அவனது பெயராலேயே தஞ்சபுரி என்றாகி, தஞ்சாவூர் என காலப்போக்கில் பெயர் மாறியது. இங்கே மதுரைவீரன், பூரண பொற்கொடி சமேத அய்யனார் சிலைகளும் உள்ளன. சிவபெருமானே இங்கு தீர்த்த வடிவமாக உள்ளார் என்றும் கூறுகிறார்கள்.
பைரவர், சூரியன், சனிபகவான் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன.
மாசி கடைசிவாரம் அல்லது பங்குனி முதல்வாரத்தில் பச்சைக்காளி, பவளக்காளி சிலைகளை வர்ணம்பூசி எடுத்து வீடு வீடாக சென்று காளியாட்டம் நடக்கும். இதை காளியாட்ட திருவிழா என்கிறார்கள். தஞ்சாவூர் அரண்மனையில் அம்பாளுக்கு அரசரின் பிரதிநிதி பூஜை நடத்துவார். இந்த திருவிழா காலத்தில் பால்குடம் எடுப்பது மிகவும் விசேஷம். தஞ்சாவூர் மேல வீதியில் பச்சைக்காளி பவளக்காளி, சூலப்பிடாரி ஆகியோருக்கு தனி சன்னதி உள்ளது. காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 8.00 மணி வரையும் கோவில் திறந்திருக்கும்.