பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று துபாயில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
சிறப்பாக விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 172 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஹர்மன்ப்ரீத் கவுர் 52 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 50 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் சமாரி அத்தபத்து, அமா காஞ்சனா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 173 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடியது. இந்திய அணியின் பந்து வீச்சை சாமாளிக்க முடியாமல் திணறிய இலங்கை அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 90 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.