உலக இருதயதினம்: தூத்துக்குடியில் விழிப்புணர்வு பேரணி

உலக இருதய தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மருத்துவமனை முதல்வர் சிவக்குமார், பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் மருத்துவமனையை அடைந்தது.
இருதய நோய் குறித்தும் இருதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சுமார் 100க்கும் மேற்பட்ட செவிலிய மாணவிகள் மற்றும் மருத்துவ மாணவர்கள் ஏந்தி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேரணி முடிவில் இருதய மருத்துவத்துறை சார்பாக உலக இருதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவ பேராசிரியர் சரவணன் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஆரோக்கியமான இதயத்திற்கு தேவை மகிழ்ச்சியே! மருந்தே என்ற பட்டிமன்றம் நடுவர் புலவர். பே.சங்கரலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
மருத்துவர்கள் ராஜவேல்முருகன், மீனாட்சிசுந்தரம், மருத்துவ மாணவர்கள் ஆறுமுகம், தீபக் சர்மா, செவிலியர்கள் ஜெயந்தி மற்றும் தமிழ்செல்வி ஆகியோர்கள் கலந்துரையாற்றினர். மருத்துவ மாணவர்கள், மருத்துவ செவிலியருக்கான இருதய விழிப்புணர்வு பற்றிய போட்டிகள் நடத்தப்பட்டது. மூத்த இருதய மருத்துவ நிபுணர் பாலமுருகன் நன்றி கூறினார்.
பொதுமக்கள் இருதய நோய்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் புரிதலை நன்கு அறிந்து தகுந்த நேரத்தில் இம்மருத்துவமனையின் சேவையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மூத்த இருதய மருத்து நிபுணர்கள் பாலமுருகன், எஸ். கணேசன் ஆகியோர் கூறினர். நிகழ்ச்சியில் டாக்டர்கள் வெங்கடேஷ், ஆலன் பென்னி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
