தூத்துக்குடி ரெயில் நிலையத்திற்கு மேலும் ஒரு வாசல்: மாநகராட்சி கோரிக்கை விடுத்துள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்
தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களில் ஒரு சில தவிர்த்து, அனைத்து மனுக்களும் தீர்வு காணப்பட்டுள்ளது. கிழக்கு மண்டலத்தில் சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், குறுகலான சந்துகளில் விரைவில் சாலைப் பணிகள் நடைபெறும்.
தூத்துக்குடி ரெயில் நிலையத்திற்கு மேலும் ஒரு வாசல் அமைக்க வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகத்திற்கு மாநகராட்சி சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம். துறைமுக சபை பூங்கா மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
அந்த பூங்காவை சென்னை மெரினா போல மாற்றும் வகையில், ரூ.8 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் நடைபெறும். பொதுமக்கள் பாலீத்தீன் பைகளை பயன்படுத்துவதை தவிர்த்து துனிப் பைகளை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தூத்துக்குடி மாநகராட்சி ஓய்வூதியர் சங்கத் தலைவர் மாடசாமி, கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றதற்காக மேயருக்கு பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தார். மேலும், புதிய மாநகரட்சி அலுவலகம் பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் தங்களுக்கு தனியாக இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுபோல் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த மக்கள் மேயரிடம் கோரிக்கை விடுத்தனர்.
கூட்டத்தில், கிழக்கு மண்டல உதவி ஆணையர் சொர்ணலதா, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன், கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி தியாகராஜன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், பேபி ஏஞ்சலின், ரெக்ஸ்லின், மரிய கீதா, தனலட்சுமி, எடின்டா, மகேஸ்வரி, சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.