மத்திய பட்ஜெட்டை கண்டித்து கோவில்பட்டியில் 2 இடங்களில் மறியல்: கம்யூனிஸ்ட் கட்சியினர் 606 பேர் கைது
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் ஜி.பாபு தலைமையிலான கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் முழங்கினர்.
தொடர்ந்து, கிழக்கு பூங்கா சாலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, பிரதான சாலையில் வந்த அவர்களை தனியார் மண்டபம் முன்பு டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கேயே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட நகரச் செயலாளர் அ.சரோஜா, ஒன்றிய செயலாளர் பி.ராஜேஸ்வரி, மாவட்ட குழு உறுப்பினர் பி. பரமராஜ் உள்ளிட்ட 183 பெண்கள் உட்பட 256 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல், பயணியர் விடுதி முன்பிருந்து மார்க்சிஸ்ட் நகர செயலாளர் கே.சீனிவாசன் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.புவிராஜ், ஜி.ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் எம்.தெய்வேந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டவாறு ஊர்வலமாக புறப்பட்டு பிரதான சாலை வழியாக பாரத ஸ்டேட் வங்கி முன்பு வந்து சேர்ந்தனர்.
அங்கு அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர். போராட்டத்தில் பங்கேற்ற 150 பெண்கள் உட்பட 350 பேரை போலீசார் கைது செய்தனர். இரண்டு கட்சிகளின் மறியல் போராட்டங்களால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.