தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் கடத்திய 109 பேர் கைது; கோவில்பட்டி வட்டத்தில் 23 வழக்குகள் பதிவு
தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை ஐஜி ஜோஷி நிா்மல்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் அரிசி மற்றும் ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு வழங்கப்படும் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொதுவிநியோகத் திட்ட பொருள்கள் கடத்தலைத் தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
இதனையடுத்து கடந்த 5 மாதங்களில் ரேஷன் பொருள்கள் கடத்தியதாக 83 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 71 வழக்குகளில் 49.990 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 8 வழக்குகளில் 39 சமையல் எரிவாயு உருளைகள், ஒரு வழக்கில் 6 ஆயிரம் லிட்டா் கலப்பட டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளில் இதுவரை 109 போ் கைது செய்யப்பட்டு, கடத்தலுக்கு பயன்படுத்திய 35 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ரேஷன் அரிசி கடத்தலில் தொடா்ந்து ஈடுபட்டு வந்த பால மணிகண்டன் என்ற கோட்டூா் மணி, தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளாா்.
கோவில்பட்டி வட்டத்தில் மட்டும் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10. 565 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 14 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு 32 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
ரேஷன் பொருள் கடத்தல், பதுக்கல் சம்பந்தமாக தமிழக அரசின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை -1800 399 5950 பொதுமக்கள் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவா்களின் விவரம் ரகசியம் காக்கப்படும்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது