அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் அழைப்புக்கு உடனடி எதிர்ப்பு
நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றி இருக்கிறது.
அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை, அந்த அளவுக்கு திமுக கூட்டணி பலம் வாய்ந்ததாக உள்ளது. மேலும் 7 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு பாஜக ஆதரவுடன் ராமநாதபுரத்தில் சுயேச்சையாக போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வம் தோல்வி அடைந்து இருக்கிறார்.
தனது தோல்வியை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில்
“ஜெயலலிதா உச்சத்தில் அமர்த்திப்போன கட்சியையும், அவர் ஒப்படைத்துப் போன ஆட்சியையும் ஒற்றுமையால் மீட்டெடுக்க எத்தகைய தியாகத்திற்கும் ஆயத்தமாவோம்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதே போல் சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்த இயக்கம் ஒன்றுபட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.கட்சி அழிந்துவிடக்கூடாது, தமிழக மக்கள் முன்னேற வேண்டும் என்ற உண்மையான எண்ணம் கொண்டவர்கள் அனைவரும் வாருங்கள். ஒரு ஒளிமயமான எதிர்காலம் காத்துக்கொண்டு இருக்கிறது. மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவதே நமது இலக்கு” என்று கூறி உள்ளார்..
கே.பி.முனுசாமி பதில்
ஒ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரின் கருத்துகளுக்கு பதில் அளித்து அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
அதிமுக பல்வேறு சோதனைகளை சந்தித்தபோது, முக்கிய கருவாக இருந்து சோதனைகளை கொடுத்தவர் ஓபிஎஸ்.
மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளரையும், இரட்டை இலை சின்னத்தையும் எதிர்த்து நின்றார். அப்படி செய்தவருக்கு எந்த வகையில் அதிமுக தொண்டர்களை அழைப்பதற்கு உரிமை இருக்கிறது.
தன் சுயநலத்துக்காக ஜெயலலிதாவை விமர்சித்த அண்ணாமலையை நல்லவர் என்ற கைகுலுக்கிறார் ஓபிஎஸ். அதிமுக தொண்டர்களை ஒன்றிணையை அழைக்க ஓபிஎஸ் சுக்கு எந்தவித அருகதையும் இல்லை.
சசிகலா. அறிக்கை வெளியிட்டு 24 மணிநேரம் ஆகிவிட்டது. \எத்தனை தொண்டர்கள் அவரின் இல்லத்துக்கு சென்றிருக்கிறார்கள் என்று பாருங்கள். எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என்று ஒரு சிலர் முயற்சிக்கிறார்கள். குழப்பத்தை தாண்டி எடப்பாடி பழனிசாமி தொண்டர்களை ஒருங்கிணைத்து தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
2019 தேர்தலை விட தற்போதையை தேர்தலில் அதிமுகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. இதிலிருந்தே எடப்பாடி பழனிசாமி எந்த அளவுக்கு வழிநடத்துகிறார் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு கே.பி.முனுசாமி தெரிவித்தார்.