கள்ள நோட்டு வழக்கு : கோவில்பட்டி போலீசாரால் கைதானவர் சிறையில் சாவு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 60). இவர் கடந்த 2000-ம் ஆண்டு கோவில்பட்டி கிழக்கு போலீசாரால் கள்ள நோட்டு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து ஜாமீனில் வந்த ஜெயக்குமார் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். இதனால் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் ஜெயக்குமாரை கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தனர்.
அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.
அங்கு நேற்றிரவு சக கைதிகளுடன் சேர்ந்து சாப்பிட்டு விட்டு அவர் தூங்கச் சென்றுள்ளார். அப்போது நள்ளிரவில் திடீரென ஜெயக்குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு தமயங்கி விழுந்தார். அவரை சிறைக் காவலர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஜெயக்குமார் இறந்தார். இது குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.