• April 30, 2024

தேர்தல் நாளன்று பொதுவிடுமுறை; ஆட்சியர் அறிவிப்பு

 தேர்தல் நாளன்று பொதுவிடுமுறை; ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் வருகிற .19 ம் தேதி தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும். விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் வருகின்ற 19.4.2024 அன்று பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்திய மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தலில் வாக்களிப்பது மக்களின் ஜனநாயக உரிமையாகும்.

1951ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 135-பி-ன் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தொழிலாளர் துறை அறிவுரைகளின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தின ஊதியப் பணியாளர்கள், தற்காலிகப் பணியாளர்கள், 

அனைத்து தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் தேர்தல் நாளான 19.4.2024 (வெள்ளிக்கிழமை) அன்று வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் எனவும் அவ்விடுமுறை நாளுக்கான ஊதியம் ஒரு தொழிலாளிக்கு ஒரு நாளுக்கு அளிக்கப்பட்டு வரும் ஊதியமாகவும், பணியின் தன்மைக்கேற்ப அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியத்திற்கு குறையாமலும் இருக்க வேண்டும் எனவும் அனைத்து வேலையளிப்பவர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அவர்களின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் தேர்தல் நாளான 19.4.2024 அன்று மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறை தூத்துக்குடி சோரீஸ்புரம் ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை கட்டிட வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது (தொலைபேசி எண்.0461-2340443).

தொழிலாளர்கள் தேர்தலில் வாக்களிக்கும் பொருட்டு சம்பளத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்த புகாரினை தூத்துக்குடி மாவட்ட நோடல் அதிகாரி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) செ.மின்னல்கொடி (93444 47888), தொழிலாளர் துணை ஆய்வாளர் சி.ஆறுமுகம் (99420 22233), தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் செ.செய்யதலி பாத்திமா (98944 33013), இரா.பிரேம்குமார் (99408 97894), பெ.சூரியன் (90035 54445), மு.ஜோதிலட்சுமி (74183 04076) ஆகிய அலுவலர்களிடம் கைப்பேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். 

புகாரின் அடிப்படையில் உரிய சட்ட விதிகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *