• May 7, 2024

`இனிமேல் பிரசாரம் செய்யமாட்டேன்’ – பாஜக தலைவர் நட்டாவுக்கு  நடிகை குஷ்பு கடிதம்

 `இனிமேல் பிரசாரம் செய்யமாட்டேன்’ – பாஜக தலைவர் நட்டாவுக்கு  நடிகை குஷ்பு கடிதம்

நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்தவர் குஷ்பு. திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் இருந்து பின்னர் பாஜகவில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். அக்கட்சியின்  தேசிய செயற்குழு கமிட்டி உறுப்பினராக உள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை  தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து குஷ்பு தேர்தல் பிரசாரம் செய்து வந்தார். இந்நிலையில் பாஜகவுக்கான தேர்தல் பிரசாரத்தை நிறுத்தி கொள்வதாக நடிகை குஷ்பு அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

: நன்றியோடும், சோகத்துடனும் இந்த கடிதம் மூலம் உங்களை அணுகுகிறேன். வாழ்க்கை என்பது கணிக்க முடியாதது. நாம் நன்றாக இருப்பதாக உணரும்போது சில பிரச்சினைகள் வருகிறது. நானும் அத்தகைய நிலையை எட்டியுள்ளேன்.

2019ல் டெல்லியில் துரதிர்ஷ்டவசமாக நடந்த விபத்தில் எனக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த காயம் கடந்த 5 ஆண்டுகளாக என்னை துன்புறுத்துகிறது. தொடர்ந்து சிகிச்சை எடுத்து கொண்டாலும் குணமடையாத நிலையில் இருக்கிறேன். இத்தகைய சூழலில் பிரசாரம் செய்ய வேண்டாம் என்று எனது மருத்துவ குழு கண்டிப்புடன் அறிவுறுத்தியது.

பிரசாரம் செய்தால் உடல்நிலை இன்னும் மோசமாகும் எனவும் எச்சரித்தனர். ஆனால் அர்ப்பணிப்பு உணர்வுள்ள ஒரு பாஜகவின் தொண்டராகவும், பிரதமர் மோடியை பின்பற்றும் நபராகவும் கட்சியின் போர்வீரர் என்ற முறையில் டாக்டர்கள் அறிவுரைக்கு எதிராக வலி மற்றும் வேதனைகள் இருந்தாலும் என்னால் முடிந்தவரை பிரசாரம் செய்தேன்.

ஆனால் இப்போது நிலைமை மோசமாகிவிட்டது பலகட்ட ஆலோசனைகளை பெற்றேன். அப்போது பிரச்சினையை சரிசெய்ய தேவையான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தினர். இது ஒரு பெரிய அல்லது உயிருக்கு ஆபத்தான செயல்முறை அல்ல. இருப்பினும் கூட தாமதம் செய்ய முடியாத நிலை உள்ளது.

ஏனென்றால் தாமதம் செய்வது எனது எதிர்கால நல்வாழ்வுக்கு பிரச்சினையை ஏற்படுத்தலாம். மேலும் தற்போதைய வழக்கமான செயல்முறைகளை நான் குறைத்து கொண்டேன். பிரசாரம் என்பது நீண்ட பயணங்கள், நீண்டநேரம் அமர்ந்து இருப்பது உள்ளிட்டவற்றை கொண்டாக இருக்கும்.

 இந்த 2 விஷயங்களையும் தேர்தல் பிரசாரத்தில் தவிர்க்க முடியாது. இதனால் தற்போதைய தேர்தல் பிரசாரத்தில் என்னால் பங்கேற்க முடியாது என்பதை கணத்த இதயத்துடன் தெரிவித்து கொள்கிறேன். அதேவேளை முக்கியமான இந்த நேரத்தில் கட்சிக்கு என்னால் பங்களிக்க  முடியவில்லையே என்ற ஆழ்ந்த மனவருத்தம் உள்ளது. இருப்பினும் எனது வலைதள பக்கங்கள் மூலம் பாஜகவின் கொள்கை, செயல்திட்டங்களை மக்களிடம் எடுத்து செல்வதன் மூலம் தொடர்ந்து பிரசாரத்தின் ஒருபகுதியாக நான் இருப்பேன்.

உங்களின் ஊக்கம் வலுவாக நான் திரும்பி வருவதற்கான முயற்சிக்கு வலு சேர்க்கிறது. நான் குணமடைந்து விரைவில் திரும்பி வருவேன். மேலும் நம் பிரதமர் தொடர்ந்து 3 வது முறையாக பதவியேற்பதையும், நான் எங்கிருந்தாலும் சத்தமாக ஆரவாரம் செய்வதையும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் நடிகை குஷ்பு கூறி உள்ளார்,

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *