தூத்துக்குடியில் மழை: உப்பு உற்பத்தி கடும் பாதிப்பு
![தூத்துக்குடியில் மழை: உப்பு உற்பத்தி கடும் பாதிப்பு](https://tn96news.com/wp-content/uploads/2024/03/3948c2de-9c9c-4fa6-af5e-8a95bfebf564-1-850x560.jpg)
மழை தண்ணீரில் உப்பளங்கள் மூழ்கி கிடக்கும் காட்சி.
தூத்துக்குடியில் உப்பள தொழில் மிகவும் முக்கியமானதாகும். வருடத்தில் 6 மாதம் உப்பு உற்பத்தி இருக்கும். 6 மாதம் மழைக்காலத்தில் தேக்கி வைத்து விற்பனை செய்யப்படும்.
ஏற்கனவே ஜனவரியில் தொடங்க வேண்டிய உப்பு உற்பத்தி தாமதமாக மார்ச் மாதம் தான் தொடங்கியது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. அவ்வப்போது கனமழையும் பெய்தது,. தூத்துக்குடியில் 40 மில்லிமீட்டரும், காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 28 மில்லிமீட்டரும் மழை அளவு பதிவாகி உள்ளது..
தூத்துக்குடி மாநகர் , முத்தையாபுரம், பழைய காயல், ஆறுமுகநேரி, முள்ளக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக இந்த பகுதியில் உள்ள உப்பளங்களில் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக உப்பளங்களில் உப்பு உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை பெய்த கனமழையால் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த கோடை மாதங்களில் தான் உப்பு உற்பத்தி அதிகமாக நடக்கும்.. ஆனால் இந்த நேரத்தில் மழை பெய்துள்ளதால் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று பெய்துள்ள மழையின் காரணமாக அடுத்த 15 முதல் 20 நாட்களுக்கு உப்பு உற்பத்தி பணியை மேற்கொள்ள முடியாது என உற்பத்தியாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
மழையினால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகும்.50 ஆயிரம் டன் உப்பு உற்பத்தி ஆகும் இடத்தில 20 ஆயிரம் டன் உப்பு மட்டுமே உற்பத்தி ஆகும் வேலையில் உப்பு விலையும் அதிகரிக்கும் என்று உப்பு மொத்த வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)