• April 27, 2024

தமிழ்நாட்டுக்கு நன்மை செய்யக்கூடிய ஆட்சி மத்தியில் வரவேண்டும்; தூத்துக்குடி பிரசாரத்தில் கனிமொழி பேச்சு

 தமிழ்நாட்டுக்கு நன்மை செய்யக்கூடிய ஆட்சி மத்தியில் வரவேண்டும்; தூத்துக்குடி பிரசாரத்தில் கனிமொழி பேச்சு

தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி தருவைக்குளத்தில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். 

தொடர்ந்து, புதியம்புத்தூர், ஓட்டப்பிடாரம், ஓசானுத்து, வாஞ்சி மணியாச்சி, அக்கநாயக்கன்பட்டி, மருதன்வாழ்வு, ஆயிரவன்பட்டி  ஆகிய பகுதிகளில் கூடி நின்ற மக்களைச் சந்தித்து,உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

பிரச்சாரத்தின்போது கனிமொழி பேசியதாவது: 

கடந்த தேர்தலில் வேட்பாளராக நான் களம் கண்ட போது, எதிர்க்கட்சிகள் இவர் சென்னையில் இருந்து வருகிறார். வெற்றி பெற்றால் மீண்டும் தூத்துக்குடி வரமாட்டார் எனக் கூறினர். வெற்றி பெற்ற பின்னர் இங்கு பலமுறை வந்துள்ளேன்.

 தருவைகுளத்தில் இருந்து வேளாங்கண்ணி செல்ல பேருந்து வசதி, கனரா வங்கி கிளை வேண்டும் என மக்கள் கேட்டனர். இவை செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.10 லட்சத்தில் உயர் கோபுர விளக்கு அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. இங்கு புதிய மீன்பிடி துறைமுகம் வேண்டுமென மீனவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இந்த கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும். இதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு ரூ.2 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

மீன்பிடி தடைக்காலத்தில் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். முதலமைச்சர் உயர்த்தி தருவதாகக் கூறியுள்ளார். விரைவில் அந்த நிதி உங்கள் கைகளில் வந்து சேரும். 

இங்கு மிகப்பெரிய வியட்நாம் கார் தொழிற்சாலை இன்னும் 15 மாதங்களில் தொடங்கப்பட உள்ளது. டைடல் பார்க் விரைவில் திறக்கப்பட உள்ளது. இந்த ஆட்சி ஆண், பெண், சாதி, மதம் என எந்த வேறுபாட்டையும் பார்க்காத ஆட்சி. ஆனால், மதத்தை மட்டும் வைத்து அரசியல் செய்து கொண்டுள்ள மோடி, எந்த வாக்குறுதி கொடுத்தாலும் நிறைவேற்ற மாட்டார். மழை வெள்ளத்துக்கு எந்த நிவாரணமும் கொடுக்க வில்லை. ஆனால், நிவாரணம் கொடுத்தது தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். 

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் கொடுத்து விலையை குறைப்பேன் என்று பாஜகவினர் கூறினார். அவர் ஆட்சிக்கு வந்தபோது, ஒரு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.410. தற்போது ஆயிரம் ரூபாய்க்கு மேல். ஆனால், மகளிர் தினத்துக்குப் பெண்கள் சமையல் அறையிலேயே இருக்க பிறந்த மாதிரி ரூ.100 குறைத்துள்ளார். இதுதான் அவருக்குத் தெரிந்த மகளிர் தினம்.

சிலிண்டர் விலையை குறைத்துள்ளேன் எனத் தேர்தலுக்கு முன் மகளிர்களை ஏமாற்றுகிறார்.இதற்காக திமுக தேர்தல் அறிக்கையில் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.500 என குறைக்கப்படும். பெட்ரோல் ரூ.75, டீசல் ரூ.65 என குறைக்கப்படும். அதே போல், சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில் முற்றிலும் ஒழிக்கப்படும் என கூறியுள்ளோம். திமுக சொல்வதை தான் செய்யும். 

இந்தியா கூட்டணி ஆட்சி ஒன்றியத்தில் வர வேண்டும். தமிழ்நாட்டுக்கு நன்மை செய்யக்கூடிய ஆட்சி அங்கே வர வேண்டும். 

 இவ்வாறு கனிமொழி பேசினார். 

பிரச்சாரத்தின்போது, அமைச்சர் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, ஸ்ரீ வைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் மற்றும் கூட்டணி கட்சியினர்  கலந்து கொண்டனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *