நாடாளுமன்ற மக்களவை தேர்தல்: வாக்குசாவடிகளில் நிழல் கூடாரம், குடிநீர் வசதி; தேர்தல் ஆணையம் உத்தரவு
![நாடாளுமன்ற மக்களவை தேர்தல்: வாக்குசாவடிகளில் நிழல் கூடாரம், குடிநீர் வசதி; தேர்தல் ஆணையம் உத்தரவு](https://tn96news.com/wp-content/uploads/2024/03/23607856-ec6b-43d1-bac7-a13e68e5de18-850x560.jpeg)
அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
வரவிருக்கும் கோடை காலத்தில் வழக்கத்தைவிட அதிகமான வெப்பநிலை நிலவும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை வெப்ப அலைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
இந்த தாக்கத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அதன்படி, பொதுமக்கள் வெப்ப அலையின் பாதிப்பு இல்லாமல், வாக்களிக்க வசதியாக உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச வசதிகளை வாக்குச் சாவடிகளில் கட்டாயம் ஏற்படுத்தி தர வேண்டும்.
வயதான மற்றும் மாற்றுத் திறன் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை சிரமமின்றி செலுத்த ஏதுவாக, தரைதளத்தில் வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டும்.
இதுமட்டுமின்றி, குடிநீர், உட்கார்வதற்கான நாற்காலி, பெஞ்ச், தடையில்லாத மின்சாரம், முறையான வழிகாட்டு பலகைகள், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளையும் வாக்குச்சாவடிகளில் ஏற்படுத்த வேண்டும்.
நிழலுக்கான கூடார ஏற்பாடுகள், குழந்தைகளுக்கான காப்பகம் மற்றும் வாக்காளர் உதவி மையம் ஆகியவற்றை அமைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
வெப்ப அலைகளின் தாக்கம் இருக்கும் போது பெண்கள் தங்கள் கை குழந்தைகளை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து வர வேண்டாம்.
இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)