தூத்துக்குடியில் ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை வழங்குதல் தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த அதிகனமழையின் காரணமாக மிகக்கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஏரல் மற்றும் சாத்தான்குளம் ஆகிய 5 வட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ.6000 நிவாரணத் தொகை, 5 கிலோ அரிசி வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
மேலும் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம் மற்றும் கயத்தார் ஆகிய 5 வட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ.1000 நிவாரண தொகை வழங்கப்படும் என்றும்.ஸ்டாலின் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து இன்று தூத்துக்குடி ஜெயராஜ் ரோடு, டூ.வி.புரம் 5வது தெரு, நியாய விலைக்கடையில் நடைபெற்ற நிகழ்ச்சி கலெக்டர் லட்சுமிபதி தலைமையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ.6000 நிவாரணத் தொகை மற்றும் 5 கிலோ அரிசி ஆகியவற்றை கனிமொழி எம்.பி. வழங்கி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடியில் 93 நியாய விலைக்கடையில் நிவாரண தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டம் தூத்துக்குடி மாநகராட்சியின் 60 வார்டு பகுதிகளிலும் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன், மாநகராட்சி மண்டலத்தலைவர் கலைச்செல்வி, மாவட்ட உணவு பொருள் வழங்கல் அலுவலர் அபுல்ஹாசன், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் முத்துக்குமாரசாமி, உணவு பொருள் வழங்கல் தாசில்தார் ஜான்சன், தாசில்தார் பிரபாகர், செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.