கோவில்பட்டியில் கனமழை; ரெயில்வே சுரங்க பாலத்தில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு
கோவில்பட்டியில் சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. தினமும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்கிறது. நேற்று மழை இல்லை.
இன்று காலையில் இருந்து மேக மூட்டமாக இருந்தது.மாலை 4.15 மணி அளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் 45 நிமிடம் மழை கொட்டியது.
இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேற்கு போலீஸ் நிலைய வளாகத்துக்குள் மழை நீர் புகுத்தது.
வழக்கமாக எப்போது மழை பெய்தாலும் இளையரசனேந்தல் சாலையில் உள்ள ரெயில்வே சுரங்க பாலத்தில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்படுவது வழக்கம்.
அதே போல் இன்றைய மழைக்கும் அந்த பாலத்தில் தண்ணீர் தேங்கியது. இந்த நிலையில் மதுரையில் இருந்து வந்த தனியார் பஸ் மழை நீரில் சிக்கியது. இதனால்அதில் இருந்த பயணிகள் அலறினார்கள்.
தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பயணிகளை பாதுகாப்பாக கீழே இறக்கினர். பின்னர் ஜேசிபி மூலம் பஸ் அங்கிருந்து அகற்றபட்டது. இதை தொடர்ந்து அந்த பாலம் வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.
நகராட்சி பணியாளர்கள் அங்கு தேங்கிய தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றினார்கள்.
மேலும் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மெயின் ரோட்டில் இருந்து வாகனங்கள் செல்லவிடாமல் தடுப்பு வைத்து போலீசார் தடுத்தனர்.
இதனால் வாகனங்கள் மெயின் ரோடு, லட்சுமி மில் பாலம், பைபாஸ் சர்வீஸ் ரோடு வழியாக 3 கி. மீ. தூரம் சுற்றி சென்றன.
இளையரசனேந்தல் சாலையின் இருபுறமும் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது. இதை தொடர்ந்து சாலை புதுப்பிக்கப்படும் என்ற நிலை இருந்தது. ஆனால் சாலையை அப்படியே விட்டுவிட்டார்கள்.
சாலை முழுவதும் அரித்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. மழை பெய்தால் குழி தெரியாது, தண்ணீர் தேங்கி இருக்கும். தினமும் இந்த குழியில் விழுந்து செல்லும் இரு சக்கர வாகனந ஓட்டிகள் நிலைமை பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது.
இந்த சாலையில் குறைந்த பட்சம் பேட்ச் ஒர்க் செய்தால் கூட மக்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வார்கள். தற்போது இந்த சாலையில் ஒருவித பயத்துடன் இருசக்கர வாகன ஓட்டிகள் சென்று வருகிறார்கள்.
அதுவும் இரவு நேரத்தில் ஒருசில தெருவிளக்குகள் மட்டுமே கொண்ட இந்த சாலையில் பயணம் செய்வது என்பது ஒரு திகிலான சவாலாகத்தான் இருக்கிறது என்று பலரும் கூறுகிறார்கள். அதிகாரிகள் பார்வை இந்த சாலையில் படுவது எப்போது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.