மகாலட்சுமிக்கு பிடித்த மலர்கள்-நிவேதனங்கள்
ஆதிசங்கரர், வேதாந்த தேசிகர், வித்யாரண்யர் ஆகியோருக்கு ஒரு ஒற்றுமை உண்டு. இவர்கள் எல்லோரும் மகாலட்சுமிக்கு ஸ்தோத்திரம் செய்தவர்கள். தங்களை நாடி வந்த ஏழைக்கு செல்வம் கிடைக்க வேண்டும் என்று `கனகதாரா ஸ்தோத்திரம்’ செய்தார் ஆதிசங்கரர்.
வேதாந்த தேசிகர் ஸ்ரீஸ்துதி செய்தார். வித்யாரண்யருக்கு மகாலட்சுமியினுடைய தரிசனமே கிடைத்தது. ஆனால், இவர்கள் எல்லோருமே தங்களுக்காக மகாலட்சுமியை பிரார்த்திக்கவில்லை. ஆதிசங்கரர் மகாலட்சுமியை செல்வத்தின் அதிதேவதையாக மட்டும் கருதவில்லை.
ஞானம் என்னும் நித்திய செல்வத்தை அருள்பவளாகவே கருதித் துதித்தார். அவர் பாடிய ஸ்லோகம் இது. விச்வாம ரேந்த்ர பதவிப்ரமதா தட்சம் ஆநந்த ஹேதுரதிகம் முரவித்விஷோ அபிஈஷந்நிஷீ தது மயிக்ஷண மீக்ஷணார்த்தம் மிந்தீவரோதர ஸஹோதர மிந்திராயா:’
உன் பார்வை விளையாட்டாய்கூட எவர் மீது பட்டாலும் அவர் விண்ணுலக வாழ்வை பெற்று இந்திரனுக்கு சமமாக வாழ்வான்.நீலோத்பல மலர் மகுடம் போன்ற உன் திருமுகத்தின் விழிகளின் கடைக்கண் பார்வை ஒருக்ஷணம் என் மீது பட்டாலும் உன் கருணைக்கு ஆளாவேன் தாயே!’’ என்பது இந்த ஸ்லோகத்தின் பொருள்.
மகாலட்சுமிக்கு பிடித்த தாமரைப் பூ, மல்லி பூ, மரிக் கொழுந்து, பன்னீர் ரோஜா, இப்படி நமக்கு எந்த பூ கிடைத்தாலும் அதை வைத்து வழிபாடு செய்யலாம். வாசனை மிகுந்த சந்தனம், ஜவ்வாது, அத்தர், கோரோசனை இப்படியாக பல வாசனை பொருட்கள் மகாலட்சுமிக்கு மிகவும் உகந்தது.
மிக முக்கியமாக பொங்கல், பால் பாயசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், தேன், கற்கண்டு, ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழைப்பழம், திராட்சை முதலிய கனி வகைகளைப் படைக்க வேண்டும். மிக முக்கியமாக தாமரை மலர்கள் மகாலட்சுமிக்கு பிடித்தமானது. வில்வமும் மகாலட்சுமிக்குப் பிடித்தமானது.
பார்கவிமகாலட்சுமியை மகளாக அடைய வேண்டும் என்று சாமானிய மன்னர்கள் மட்டுமல்ல ரிஷிகளும் விரும்புகிறார்கள். பிருகு மகரிஷி சாட்சாத் மகாலட்சுமி தனக்கு குழந்தையாகப் பிறக்க வேண்டும். அந்த குழந்தையை, தான் கண்ணும் கருத்துமாக வளர்த்து மகாவிஷ்ணுவுக்கு மாமனாராக இருந்து மணம் முடித்துத் தர வேண்டும் என்று தவம் செய்தார். அந்த தவத்தை உத்தேசித்து மகாலட்சுமி பிருகு மகரிஷியின் மகளாகத் தோன்றினாள். பிருகு புத்ரி என்பதால் குழந்தைக்கு பார்கவி என்று பெயர் சூட்டினார்.
மகாலட்சுமியை ரிஷிகள், மன்னர்கள் மட்டுமல்ல, கோடீஸ்வரர்களும் விரும்புகின்றார்கள். எவ்வளவு செல்வம் இருந்தாலும் மேலும் செல்வம் வேண்டும் என்று பிரார்த்திக்காதவர்கள் யார் இருக்கின்றார்கள். செல்வத்தைச் சம்பாதிப்பது பெரிய விஷயம் அல்ல; அது தவறானவர்களிடம்கூட, சமயத்தில், பூர்வ ஜென்ம வினையால் சேர்ந்துவிடும் அது மிக சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்கு மகாலட்சுமியின் அருள் வேண்டும்.
எது நிரந்தர, நீங்காத செல்வமோ அதைத் தர வேண்டும் என்று மகாலட்சுமியை பிரார்த்திக்க வேண்டும். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைச் சொல்லலாம் ராமாயணத்தில் லட்சுமணன் மரவுரி தரித்து ராமனோடு காட்டுக்குக் கிளம்பத் தயாராகின்றான். அவனை காட்டுக்கு போ என்று யாரும் சொல்லவில்லை. மரவுரி தரிக்கவும் யாரும் சொல்லவில்லை.
அவன் சகல சவுக்கியங்களும் அனுபவிக்கக் கூடிய இளவரசன். ஆனால், ராமனுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று, எல்லாவற்றையும் உதறி விட்டுக் கிளம்பினான். இப்படிக் கிளம்பியதால் அசல் செல்வந்தன் ஆனான் என்ற பொருளில் லஷ்மனா லஷ்மி சம்பன்ன: என்று அவனை ஸ்ரீமான் என்கிற பட்டம் கொடுத்து அழைத்தார்கள்’’. அவனுக்கு நிலைத்த செல்வமான கைங்கரிய செல்வம் கிடைத்தது.
மகாலட்சுமி தேவியின் மலரடிபணிந்து அறிவு செல்வம் ஆற்றல் பெறுவோமாக.
(காசி விஸ்வநாதன்-திருநெல்வேலி)