• November 1, 2024

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஆட்டோ டிரைவருக்கு முதுகெலும்பு முறிவு அறுவை சிகிச்சை; டாக்டர்கள் சாதனை  

 கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஆட்டோ டிரைவருக்கு முதுகெலும்பு முறிவு அறுவை சிகிச்சை; டாக்டர்கள் சாதனை  

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சி சிந்தாமணி நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி(வயது 55). இவரது மனைவி மாரியம்மாள். இவர்களின் மகன் பழனிச்சாமி, சரக்கு ஆட்டோ டிரைவராக இருந்தார்.

 கடந்த மாதம் 19-ம் தேதி தனது சரக்கு  ஆட்டோவில் கோவில்பட்டியில் இருந்து விருதுநகர் மாவட்டம் மீனாட்சிபுரத்துக்கு பாரம் ஏற்றிச்சென்று இறக்கிவிட்டு, ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். மதுரை – திருநெல்வேலி நான்குவழிச்சாலையில் வந்த போது பின்னால் வந்த கார், சரக்கு  ஆட்டோ மீது மோதியது. இதில்,  ஆட்டோ சாலையோர பள்ளத்தில் விழுந்தது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பழனிச்சாமியை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்த சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி அளித்தனர். ஸ்கேன் பரிசோதனையின் போது,  நடு முதுகெலும்பு பகுதியில் இரண்டு இடங்களில்  முறிவு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதி பெற்றனர். தொடர்ந்து கடந்த 5-ம் தேதி மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்  பாலகிருஷ்ணன் தலைமையில் டாக்டர்கள்  பாண்டிபிரகாஷ், மோசஸ்பால், மனோஜ்குமார், மயக்க மருந்து நிபுணர் இளங்கோ உள்ளிட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர் பழனிச்சாமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.. தொடர்ந்து 14 நாட்கள் கண்காணிப்பில் இருந்த பழனிச்சாமி இன்று சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்  பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

முதுகெலும்பு முறிவு அறுவை சிகிச்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் தான் நடந்து வந்தது. முதன் முறையாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வெற்றிகரமாக நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

விபத்தில் சிக்கிய பழனிச்சாமிக்கு நடந்த ஸ்கேன் பரிசோதனையில் அவரது நடு முதுகெலும்பில் 2 இடங்களில் முறிவு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து இணை இயக்குநர் (பொறுப்பு) மருத்துவர் அகத்தியன்  வழிகாட்டுதல்படி அறுவைசிகிச்சை செய்ய முடிவு செய்தோம்.

இதற்காக 10 செ.மீ. உயரத்திலான 2 டைட்டானியம் கம்பிகள் வைக்கப்பட்டு, 4 ஸ்க்ரூக்கள் பொருத்தப்பட்டன. சாதாரண கம்பியை விட டைட்டானியம் கம்பிகள் தொற்று ஏற்படும் சாத்தியம் குறைவு. தொடர்ந்து 3 நாட்களில் அவருக்கு பிசியோதெரபி பயிற்சியும், நடைபயிற்சியும் வழங்கினோம். 14 நாட்கள் எங்களது கண்காணிப்பில் வைத்திருந்து, இன்று அவரை சிகிச்சை முடித்து டிஸ்சார்ஜ் செய்து அனுப்புகிறோம்.

அவருக்கு சில பயிற்சிகளை கற்றுக்கொடுத்துள்ளோம். அதனை அவர் வீட்டில் இருந்தவாறே செய்ய வேண்டும். 3 மாத ஓய்வுக்கு பின்னர் அவர் வேலைக்கு செல்லலாம். அடுத்து 6 மாதங்கள் வரை, மாதம் ஒருமுறை அவரை பரிசோதனைக்கு வர வேண்டும் என அறிவுறுத்தி இருக்கிறோம்.

இவ்வாறு டாக்டர் பாலகிருஷ்ணன் கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *