சரக்கு ஆட்டோ மீது பஸ் மோதியது; 7 பேர் படுகாயம்
தூத்துக்குடியில் இருந்து இன்று அதிகாலை 5 மணியளவில் திருநெல்வேலிக்கு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. பஸ்சை டிரைவர் மகேஷ் (37) ஓட்டினார். சில தினங்களாக தூத்துக்குடி-பாளை நெடுஞ்சாலையில் ரோடு பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால், ஒருவழி பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டிந்தன.இதனால் அந்த பாதையில் போக்குவரத்துநெரிசல் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று திருநெல்வேலி நோக்கி சென்ற பஸ் மறவன்மடம் அருகே வலது பக்கமாக ஒருவழிப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது செக்காரக்குடியில் இருந்து தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டுக்கு சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது. அதனை டிரைவர் பேச்சிமுத்து ஓட்டி வந்தார். அப்போது சரக்கு வாகனமும் , அரசு பஸ்சும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன,
இந்த் விபத்தில் வேன் முற்றிலும் சேதம் அடைந்தது. பஸ்சின் வலது முன்பக்கம் சேதம் அடைந்தது. ஆட்டோவில் வந்த 5 பேரும், பஸ் கண்டக்டர் மற்றும் ஒரு பயணி ஆகிய 7 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்த செக்காரகுடியை சேர்ந்த சுடலை (வயது 50), பேச்சிமுத்து (24), ஊர்க்காவலன் (47), முருகபெருமாள் (49), கார்த்திக்ராஜா (22), பஸ் கண்டக்டர் வெள்ளைசாமி (42), பஸ் பயணி கோரம்பள்ளத்தை சேர்ந்த சந்திரசேகர் (51) ஆகியோர் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.