• May 17, 2024

ஒரு கோடி பெண்களுக்கு மாதம் தலா ரூ.1,000 வழங்கும் திட்டம்; மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

 ஒரு கோடி பெண்களுக்கு மாதம் தலா ரூ.1,000 வழங்கும் திட்டம்; மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையில், உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவோம்’ என்று அறிவிக்கப்பட்டது.

தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், பல்வேறு அறிவிப்புகள் நடைமுறைக்கு வந்தாலும், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் அந்த பட்டியலில் இடம்பெறாமலேயே இருந்து வந்தது.

இதனிடையே, தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி (இன்று) தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி அண்ணாவின் 115-வது பிறந்தநாளான இன்று அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விழாவில், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

இந்த திட்டத்தின்கீழ் தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளின் வங்கிக்கணக்குகளுக்கு ஏற்கனவே ரூ.1 அனுப்பி சோதனை செய்யப்பட்டது. அதேவேளை, நேற்று முதலே பலரது வங்கிக்கணக்குகளில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டது. ஆனால், உடனடியாக வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியவில்லை. இன்றுதான் அந்தப் பணத்தை எடுக்க முடியும்.

மேலும், நிராகரிக்கப்பட்ட மனுதாரர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆவண சரிபார்ப்பில் தகுதியான பயனாளியாக இருந்தால், அவர்களும் ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்று  அரசு தெரிவித்துள்ளது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *